ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் அதன் கீழ் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன பலன் குறித்து இந்த தொகுப்பில் அறிவோம்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் அறிமுகப்படுத்தியவர் யார்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 21.05.2022 அன்று ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் நோக்கம்
ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.05.2022 அன்று சட்டப்பேரவையின் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கில், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற புதிய திட்டத்தின் கீழ் முதல்வர் இதனை தொடங்கிவைத்தார்.
மருத்துவ பரிசோதனை எப்போது?
இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுயடைவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்குட்படும் குழந்தைகள் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க விழாவின்போது, செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட இயக்குனர் அமுதவல்லி, நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் சா.ப அம்ரித், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.