நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க நான்கு உறுப்பினர்களை கொண்ட விசாரணை குழுவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2024-2025 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். குறிப்பாக ஒரே மையத்திலிருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சை ஆகியுள்ளது.கடந்த மாதம் நடந்த நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பியிருந்தார். இதே போல கேரளாவில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வலுத்துள்ளது. குஜராத், சத்தீஸ்கர் ஹரியானா, மேகாலயா மாநிலங்களில் உள்ள ஆறு மையங்களில் தேர்வு எழுதிய 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முறைகேடு செய்த முகமையை, சிறப்பு புலனாய்வு குழு கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.