NSS Administration Structure in Tamil | என்எஸ்எஸ் நிர்வாக அமைப்பு முறை
NSS Administration Structure in Tamil
தேசிய நிலை
தேசிய அளவில்
நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் இந்திய அரசு நிர்ணயம் செய்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் நிர்வாக பணிகளை கவனித்து வருகிறது. அந்த அமைச்சகத்தில் திட்ட ஆலோசகர் ஒருவர் செயல்படுவார். அவர் நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகளை திட்டமிடுதல், ஆலோசனை வழங்குதல் அவற்றை செயல்படுத்துவதில் உதவி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்.
Read Also: National Service Scheme Day in Tamil
மேலும், அவர் ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமாக பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார். மாநில வாரியான மற்றும் பல்கலைக்கழக வாரியான பதிவுகளை மேற்பார்வை செய்வார்.
மாநில நிலை
மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகளை கவனிப்பதற்கான மாநில ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு மாநில அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதன் தலைவராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இருப்பார். இதன் உறுப்பினர்களாக தலைமை செயலாளர் முதல் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள் வரை இடம்பெறுவர்.
- தலைவர்
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்
- உறுப்பினர்கள்
- தலைமை செயலாளர்
- அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள்
- செயலர்/கல்வி மற்றும் இளைஞர் நலத்துறையின் தலைவர்
- இந்திய அரசின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலக அலுவலர்
- ஆணையர்
- T.O.C ஒருங்கிணைப்பாளர்
- தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம் ஆகிய பிற இயக்கங்களின் பிரதிநிதிகள்
- மாநில கல்வித்துறையின் பிரதிநிதி, நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஆலோசகர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் பிரதிநிதி
பல்கலைக்கழக திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
நாட்டு நலப்பணித் திட்டத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மாநில ஆலோசனை குழுவாகவும் செயல்படுகின்றனர். இம்மாநில ஆலோசனை குழுவானது வருடத்தில் இருமுறைகூடும். ஒருவேளை குறித்த காலத்தில் தலைமை செயலரின் தலைமையில் இக்கூட்டங்களை நடத்த இயலாவிட்டால், கல்வி செயலரின் தலைமையில் கூட்டங்கள் நடைபெறும்.
மாநில என்எஸ்எஸ் ஆலோசனை குழு
மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்டத்தின் குழுவானது மாநில தொடா்பு அலுவலரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும். இந்திய அரசு இந்த மாநில நாட்டு நலப்பணித்திட்டத்தின் குழுவிற்கு 100 சதவீத நிதி உதவி அளிக்கிறது. மாநில தொடர்பு அலுவலர் சிறந்த நாட்டு நலப்பணித்திட்டம் பின்னணியம் கொண்டவராயிருப்பார். ஒரு மூத்த திட்ட அலுவலர் அல்லது திட்ட ஒருங்கிணைப்பாளர் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழுவின் வேலை, நாட்டுநலப்பணித் திட்டத்தின் பணிகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகும்.
மாநில தொடர்பு அலுவலர் மானியங்களை அறிமுகப்படுத்துதல், நிதி திரட்டுதல் மற்றும் ஒப்படைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார். அவர் ஒவ்வொரு பகுதிக்கு உரிய நாட்டு நலப்பணித் திட்ட மையத்துடனும், பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு வைத்திருப்பார். அவர் தன்னால் இயன்ற அளவு மாநிலத்தின் அனைத்து நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகளையும் பார்வையிடுவார்.
பல்கலைக்கழக நிலை
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் பணிகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஆலோசனை வழங்க துணைவேந்தரின் தலைமையில் பல்கலைக்கழக ஆலோசனை குழு செயல்படும். இக்குழு பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும். மேலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் மற்றும் மானியங்களை வெளியிடுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல் .
தலைவர்
பல்கலைக்கழக துணைவேந்தர்
உறுப்பினர்கள்
- ஆட்சித்துறை ஆணையர் அல்லது அவரின் பிரதிநிதி
- பதிவாளர்
- செயலர், கல்வி இயக்குனர், இளைஞர் நலன்
- மண்டல என்.எஸ்.எஸ் மையத்தலைவர்
- T.O.C ஒருங்கிணைப்பாளர்
- சில செயல்திறன் உறுப்பினர்கள்
- ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் பிரதிநிதிகள்
- ஒன்று அல்லது இரண்டு திட்ட அலுவலர்கள்
- மாநில தொடர்பு அலுவலர்
- அரசு திட்டம் சார்ந்த நிறுவனங்கள்/சமூக சேவை அமைப்புகள்/ கிராமப்புற மேம்பாட்டு பிரதிநிதிகள்
- நிதி அலுவலர்
- நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் – உறுப்பினர் தலைவர்
பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஆலோசனைக்குழு
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நாட்டுநலப்பணித்திட்டத்தின் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் ஒரு குழு செயல்படும். பல்கலைக்கழகம் இக்குழுவிற்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும். இக்குழு துணைவேந்தரின் கீழ் இயங்கும்.
மத்திய அரசு/மாநில அரசிடமிருந்து வரும் கட்டணங்களை நிறைவேற்ற நாட்டு நலப்பணித்திட்டத்தின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு. மானிய வெளியீடு, திட்ட அலுவலரை தேர்ந்தெடுத்தல், கணக்கு ஒப்புவித்தல், சிறந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணையாயிருத்தல் ஆகியவையும் இவரின் பொறுப்புகளாகும். சிறப்பு முகாம்கள், ஆற்றுப்படுத்துதல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கான பொருட்கள், கருவிகள் மற்றும் வாகனங்களை தயார் செய்தல் ஆகியவற்றையும் இவரே செய்வார். இவரே கல்லூரிகள் நடத்தும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாம்களை பார்வையிடுவார். மேலும் இம்முகாம்களை இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்களும் பார்வையிடுவர்.
கல்லூரி அளவிலான நாட்டு நலப்பணித் திட்டம்
கல்லூரி அளவிலான நாட்டு நலப்பணித்திட்டம் கல்லூரி முதல்வரை தலைவராக கொண்டு செயல்படுகிறது. மூத்த திட்ட அலுவலர் ஒருவர் கல்லூரி அளவிலான என்.எஸ்.எஸ் அணிகளின் பொறுப்பாளராக திட்ட அலுவலர்கள் செயல்படுவார்கள். அணியில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைப்பதற்கு மூத்த மாணவ தொண்டர் பொறுப்பாக செயல்படுவார்.
நாட்டு நலப்பணித் திட்ட அணிகள்
ஒரு நாட்டு நலப்பணித் திட்ட அணியானது ஒரு திட்ட அலுவலரின் கீழ் நூறு மாணவர்களை கொண்டு செயல்படும். இதில் முதலாமாண்டு சேர்ந்த ஐம்பது மாணவர்களும், இரண்டாமாண்டு சேர்ந்த ஐம்பது மாணவர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு அணியின் திட்ட அலுவலர்களாக அதே கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் செயல்படுவார்கள் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.