You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மாவட்ட கல்வி அலுவலர் லஞ்ச பணத்துடன் கைது

Nilgiris DEO Santhosh

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள பார்க்சைடு சிஎஸ்ஐ., தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜான் சிபு மானிக். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இருந்து அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். சிஎஸ்ஐ., பள்ளி நிர்வாகம், கடந்த 2019ம் ஆண்டு தற்காலிக ஆசிரியரான ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக நியமிப்பது தொடர்பாக அறிக்கையை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. இதனை பரிசீலித்த பள்ளி கல்வித்துறை, அவ்வாறு பணி நிரந்தரம் செய்ய எவ்வித ஆணையும் இல்லை என கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதனை எதிர்த்து 2021ம் ஆண்டு ஜான் சிபு மானிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜான் சிபுவின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவருக்கு வர வேண்டிய பணபலன்களையும் வழங்கவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இதனை தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் மாதம் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

Read Also: மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிறை

அப்போது 2018ம் ஆண்டு முதல் இவர் பணியாற்றிய காலம் வரை நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) சந்தோசை சந்தித்துள்ளார். அப்போது ரூ 5 லட்சம் பணம் கொடுத்தால் பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை கையெழுத்திட்டு தருவதாக ஜான் சிபுவிடம், சந்தோஷ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என ஜான் சிபு தெரிவிக்கவே, இதனால் அவருக்கு ஆணை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் மாவட்ட கல்வி அலுவலர். 

ஒரு கட்டத்தில் நான் கையெழுத்து போட்டால் ஆணை வழங்கினால் உனக்கு நிலுவையில் உள்ள பண பலன்கள் ரூ 25 லட்சம் வரும் தானே, ஆனால் எனக்கு பணம் தர மாட்டேன் என்கிறாயே என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 5ம் தேதியன்று பேசும்போது ரூ 3 லட்சம் தருவதாக ஜான் சிபு தெரிவித்துள்ளார். பின்னர், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோசை, ஜான் சிபு சந்தித்தார். அப்போது ஒரு லட்சம் குறைத்து கண்டிப்பாக ரூ.2 லட்சம் கொடுத்தால் தான் பணி நியமன ஆணை என மாவட்ட கல்வி அலுவலர் கூறியதால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்காக எண்ணிடப்பட்டது. இதனால் விசாரணைக்கு வருவதற்கு முன்பு அவருக்கு கட்டாயம் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பதால், கேட்ட பணத்தை கொடுக்க வேண்டும் என அந்த ஆசிரியரிடம் மாவட்ட கல்வி அலுவலர் வற்புறுத்தி உள்ளார். 

பணம் கொடுக்க விரும்பாத ஜான் சிபு மானிக் நேற்று மதியம் ஊட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் பணத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி அருகேயுள்ள சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த ஆய்வாளர் சண்முக வடிவு, உதவி ஆய்வாளர்கள் சாதனபிரியா, சக்தி, ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் லஞச் பணம் வாங்கும்போது சந்தோசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

தொடர்ந்து அவரிடம் மூன்று மணி நேரமாக விசாரணை நடந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட இந்த கல்வி அலுவலர்தான், சமீபத்தில் நீலகிரியில் 15க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள 85 அரசு தொடக்க பள்ளிகளை மூட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அழுத்தம் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.