You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Neighbourhood School System in Tamil | அருகமைப்பள்ளி முறை என்றால் என்ன
Neighbourhood School System in Tamil
தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிமுறை, அருகமைப்பள்ளி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்கள் முன்வைத்தனர்.
திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை வகுப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று (14-10-2022) நடைபெற்றது. கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் அமைப்பின் பொறுப்பாளர்கள் திருப்பதி, இராசாமணி ஆகியோர் கல்விக் கொள்கைக்கான கீழ்க்கண்ட முன்வைப்புகளை அளித்தனர்.
பொதுப்பள்ளிமுறை, அருகமைப்பள்ளி முறை
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு பல்வேறு கல்விக் குழுக்களை அமைத்துள்ளது. ஆனால், கல்விக் குழுக்களின் பரிந்துரைகள் பல நிறைவேற்றப்படவில்லை. கோத்தாரிக் குழு (1964-66), இராமமூர்த்தி குழு(1991) (1993) ஆகியவை பொதுப்பள்ளி முறையையும் அருகமைப்பள்ளி முறையையும் வலியுறுத்தியுள்ளன. கல்வியில் முன்னேறிய வளர்ந்த நாடுகள் இம்முறைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியுள்ளன.
இம்முறைகளை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்திய மண்ணில் சாதி, மத, பொருளாதார வேறுபாடின்றி அனைத்துத் தரப்புக் குழந்தைகளுக்கும் சமவாய்ப்புள்ள, சமதரமுள்ள கல்வி கிடைக்கும். ஆட்சியாளர்களின் பிள்ளைகளும், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்கும் நிலையும் உருவாகும். தமிழ்நாடு அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர், முனைவர் முத்துக்குமரன் தலைமையில் சமச்சீர்க்கல்விக் குழுவை அமைத்தது. இக் குழு பொதுப்பள்ளி முறை, அருகமைப்பள்ளி முறை, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் மற்றும் தமிழ்ப் பயிற்று மொழி, அறிவாற்றலை அளவிடும் தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. ஆனால், இப்பரிந்துரைகளில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுப்பாடத்திட்டம் என்ற பரிந்துரை மட்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிற பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட பல்வேறு கல்விக் குழுக்களின் பரிந்துரையான பொதுப்பள்ளி முறை, அருகமைப்பள்ளி முறையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் அறக்கட்டளை முதலீட்டில் நிறுவப்பட்டு, பெற்றோர்களின் கல்விக் கட்டண நிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளை அரசு நிதியில் இயங்கும் கட்டணம் இல்லா, தனியார் அரசுதவிப் பள்ளிகளாக மாற்றி அமைப்பதன் மூலமாக, தமிழகத்தில் பொதுப்பள்ளி முறையை சாத்தியமாக்க முடியும். இதன்மூலமே கல்வியில் ஏற்றத்தாழ்வையும் கல்விக் கட்டணம் என்ற பெயரிலான பொருளாதாரச் சுரண்டலையும் ஒழிக்க முடியும்.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்தவேண்டும்
1980 க்குப் பிறகு தனியார் கட்டணப் பள்ளிகளைக் கட்டுப்பாடின்றி திறக்க ஒன்றிய அரசும் மாநில அரசும் அனுமதியளித்தன. தற்போது தமிழ்நாட்டுக் குழந்தைகளில் சரி பாதிக் குழந்தைகள் தனியார் கட்டணப் பள்ளிகளில் படிக்கின்றனர். ஏழைகளின் பிள்ளைகள் மட்டும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிப் பிள்ளைகள் பெறும் அறிவாற்றலுக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பெறும் அறிவாற்றலுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுதான் இன்று மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவ்வொதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஐந்தாண்டுகளுக்கு மேல் இவ்வொதுக்கீடு நீட்டிக்கக் கூடாது என்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்குத் தரமான. சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கான கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. கல்வித் துறை அரசாணை எண் 250 நாள் 29.02.64-ன்படி, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளிலிருந்தே 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்கள். 20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பு என்ற நிலை அப்போது இருந்தது. 33 ஆண்டுகளாக இருந்த நடைமுறை அரசாணை எண் 525 பள்ளிக் கல்வித் துறை நாள் 27.12.1997-ன்படி 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்று மாற்றப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கும் நடைமுறை உள்ளது. இப்படிப்பட்ட விகிதாச்சார முறை என்பது ஆசிரியர் நியமனத்தில் பொருத்தமற்றது. ஒரு வகுப்பில் 10 குழந்தைகள் இருந்தாலும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் நியமிக்கவேண்டும்.
உடற்கல்வி, கணினிக் கல்வி, நூலகம், உளவியல் வழிகட்டுதல் ஆகிய செயல்பாடுகளுக்கும் ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். சத்துணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகமாக்குவதோடு வரும் கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 12 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை சத்துணவு மற்றும் காலைச் சிற்றுண்டித் திட்டம் நீட்டிக்கப்படவேண்டும். முழுநேரத் துப்புரவுப் பணியாளர் நியமித்தல், தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு கூடுதலான நிதி ஒதுக்கி போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அரசுப்பள்ளிகள் அனைத்தையும் அனைவருக்குமான பள்ளிகளாக மாற்றவேண்டும்.
கல்வி விற்பனைப் பண்டமன்று
குழந்தைகளின் அடிப்படை உரிமை: ஒரு குழந்தையின் கண்ணியத்தை மதிப்பது என்பது அவர்களிடம் கட்டணம் ஏதும் பெறாமல் எழுத்தறிவு கொடுப்பது தான்.
கல்வி, மானுடத்தின் அடிப்படை உரிமை என்பதன் பொருளும் இது தான். கல்வி கொடுப்பது கருணையல்ல. மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசுகள் செய்ய வேண்டிய கடமை. காமராஜர் முதல்வராக இருந்த போதும் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பள்ளிகள் அரசின் கட்டுப்பாட்டிலும் நிதியிலும் இயங்கும் அரசு உதவிப் பள்ளிகளாக அனுமதிக்கப்பட்டன. குழந்தைகளிடம் கட்டணம் வசூலிப்பது அனுமதிக்கப்படவில்லை. வசதிப்டைத்தவர்கள் பலர் நிலத்தைக் கொடுத்தும் நிதியைக் கொடுத்தும் கட்டணமில்லா கல்வி வழங்க அரசுக்குத் துணை நின்றனர். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான அரசு உதவிப் பள்ளிகள் அரசுக்குத் துணையாக எழுத்தறிவிக்கும் கடமையை ஆற்றி வருகின்றன.
இது தான் தனியார் ஆற்றவேண்டிய உண்மையான அறம் சார்ந்த கல்விக் கடமை. ஆனால், 1980 க்குப் பிறகு தனியார் கட்டணப் பள்ளிகள் பெருக ஒன்றிய அரசும் மாநில அரசும் ஆதரவளித்தன. தனியார் கட்டணப் பள்ளிகள் பெருகுவதற்கு முன்பாக அரசுப் பள்ளிகள் அனைவருக்குமான பள்ளிகளாக இருந்தன. ஊர்தோறும் வறுமையும் அறியாமையும் சமூகப் பிரிவினைகளும் பாகுபாடுகளும் மண்டிக் கிடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளிகள் சமூக ஜனநாயகத்தின் விளை நிலங்களாக இருந்தன. “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் ஒரு வாழ்க்கை முறையே சமூக ஜனநாயகம்; அடித்தள அளவில் சமூக ஜனநாயகம் வளராத நிலையில். அரசியல் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது’’ என்று அம்பேத்கர் கூறினார்.
ஜனநாயகத்தை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அனைவருக்கும் சம உரிமை, சம மதிப்பு, சம வாய்ப்பு என்பது உறுதி செய்யப்படவேண்டும். இது தான் நமது அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கோட்பாடு. இக்கோட்பாட்டிற்கு ஏற்றபடி கல்விக் கூடங்களை நடத்தவேண்டும். கல்வியில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடற்ற சந்தைமயம் மற்றும் சமத்துவமின்மை இனிமேலாவது ஒழிக்கப்படவேண்டும். குழந்தைகளின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவேண்டும். ஜனநாயக வளர்ச்சிக்கு கல்வியும் கல்வியின் வளர்ச்சிக்கு ஜனநாயகமும் பங்காற்ற வேண்டும். இதற்கு உயிரூட்டுவதாக கல்விக் கொள்கை அமையவேண்டும்.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பிறகும் தனியார் கட்டணப் பள்ளிகள் மழலையர் வகுப்பில் இருந்தே நடந்துகொண்டே உள்ளன. கட்டணப் பள்ளிகளை அனுமதிப்பது குழந்தைகளின் கல்வி உரிமைக்கு எதிரானது. சட்டங்கள் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை. மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணமில்லாக் கல்வி வழங்குவது ஒரு மக்களாட்சி அரசின் கடமையாகப் பின்பற்றப்படவேண்டும்.
தாய்மொழி வழியில் மட்டுமே கல்வி வழங்குக
குழந்தைகள் தங்கள் வீட்டிலும், வெளியிலும் பயன்படுத்தாத மொழியில் கல்வியைக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் அறிவை முடமாக்குகிறோம். சிந்தனை ஊற்றைத் தடை படுத்துகிறோம்; குழந்தைகள் விரும்பியதைப் பேச விடாமல் தடுக்கிறோம். குருட்டு மனப்பாடக் கொடுமைக்கு ஆளாக்குகிறோம்; தானே கற்றலைத் தடை செய்கிறோம். மனப்பாடத்திறன் இல்லாத குழந்தைகளை ஒதுக்குகிறோம். தாய் மொழியில் கல்வி பற்றி ஐ நா சபையின் உநெஸ்கோ (UNESCO) அமைப்பு, தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாக கல்வி கற்கின்றனர்; அவர்கள் எளிதில் கற்கின்றனர்; இது அனைத்து வயதினருக்கும் அளிக்கப்படும் கல்விக்கும் பொருந்தும்; தாய்மொழிக் கல்வி, குழந்தைகளின் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்வது மட்டுமில்லாமல் அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை சரியாகக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது; தாய் மொழியில் குழந்தைகளால் எளிமையாக உரையாட முடிவதால் ஆசிரியர்கள் கற்பிக்கும் பொழுது அவர்களால் எளிதில் கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது; இதனால் குழந்தைகளின் பங்களிப்பு உள்ள ஒரு கல்வி முறையை கொடுக்க முடிகிறது; மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறது; பேச்சாற்றல் வளர்கிறது; ஆக்கத்திறன் கூடுகிறது. என்ற உண்மைகளை வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தாய்மொழி வழிக் கல்வி குறித்த அடிப்படை அறிவுத் தெளிவு இல்லாததால் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் கூட ஆங்கில வழிப் பிரிவுகள் பெருகி வருகின்றன. தமிழ்வழிப் பிரிவுகள் இல்லாத அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால், அறிவுக் குருடாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகிறது. குழந்தைகளை அவர்கள் அறிந்த மொழியில் கற்க விடாமல் செய்வதும் வன்கொடுமை தான். எனவே, தாய்மொழி வழிக் கல்வியே தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொடுக்க தொடக்கப்பள்ளி முதற்கொண்டு ஆங்கிலப் பாடத்திற்கென்று தனியாக ஆசிரியர் நியமிக்கவேண்டும். மருத்துவம், வேளாண்மை, அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விப் படிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழியிலும் இணைந்து கற்கும் வாய்ப்பை உருவாக்கவேண்டும்.
பன்முகத் திறன் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துக
இன்று தொடக்கக் கல்வி மதிப்பீட்டு முறை முதற்கொண்டு குருட்டு மனப்பாடத் திறனை அளவிடும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. இத் தேர்வு முறை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்றதல்ல. மனப்பாடத்திறன் எல்லோருக்கும் ஒரே அளவில் வாய்க்காது. ஆனால் நமது அறியாமையால் மனப்பாடத்திறனால் பெறும் மதிப்பெண்களையே குழந்தைகளின் அறிவுத்திறன் என்று கருதுகிறோம். தற்போது தமிழ்நாட்டில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE) எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ளது. ஆனாலும் எழுத்துத் தேர்வுக்கு மட்டுமே முதன்மைக் கவனம் செலுத்தவேண்டிய அளவிற்கு பாடச்சுமைகள் உள்ளன. கல்வியில் நம்மைவிட முன்னேறிய நாடுகளில் பன்முகத் திறன் சார்ந்த அறிவாற்றலை அளவிடும் மதிப்பீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. நூல்களைத் தேடித் தேர்வெழுதும் முறை (OPEN BOOK EXAM), மாணவர்களே கேள்விகளை உருவாக்கி விடை எழுதும் முறை, தானே சிந்தித்து விடை தேடும் முறை, தனித்திறனகளுக்கு வாய்ப்பளிக்கும் முறை போன்றவற்றை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையை உருவாக்கவேண்டும்.