நாமக்கல் மாவட்டம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தினமும் வரும் மாணவ, மாணவியரின் வருகை குறித்த விபரங்களை காலை 10.30 மணிக்குள் கோவிட் 19 செயலியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்யும்படி, சிஇஓ அய்யண்ணன் உத்தரவிட்டிருந்தார். இதை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து தாமதமாக அனுப்பும் பள்ளி விவரங்களை தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் உள்ளடங்கிய வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் கோட்டை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரகதம், பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், செயலியில் விவரங்கள் பதிவேற்றவதில் காலதாமதம் ஏற்படுவதாக, குழுவில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஒருமையில் திட்டியதையும், சஸ்பெண்ட் செய்துவிடுவதாக கூறியதும், அதற்கு தலைமை ஆசிாியரும் சஸ்பெண்ட் எதிர்கொள்வதாகவும், இருவர் பேசிய ஆடியோ வாட்ஸப் குழுக்களில் வைரலானது. இந்த நிலையில், பாச்சல் அரசு பள்ளியில் கடந்த மாதம் 16ம் தேதி உள்ளூரை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளனர். போட்டி முடிந்த பிறகு பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் மூலம், கறி விருந்து சமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் கிாிக்கெட் குழுவினருக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டுள்ளது. இதுகுறித்து, தற்போது சிலர் வாட்ஸப் குரூப்களில் போட்டோ போட்டு பதிவு செய்து வருகின்றனர். தற்போது, இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது, வாட்ஸப் குழுக்களில் பரப்பப்பட்டு வருகிறது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறும்போது, பள்ளியில் நடக்கும் அனைத்து நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தவிர மற்றவர்கள் விளையாடவோ, போட்டிகள் நடத்தவோ கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பாச்சல் அரசு பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடத்த முறையான அனுமதி இல்லை. பள்ளி ஆய்வகத்தில் கறிவிருந்தும் நடந்ததும் தற்போதுதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கு நேரில் சென்று அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார். (நாளிதழ் செய்தி அடிப்படையிலானது)