இந்தியாவில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு வெளிநாடு செல்வதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதே சமயத்தில் இந்தியாவில் படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை 164 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வந்தனர். 2019-2020 கல்வியாண்டில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தபோதிலும் 168 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறையே இதற்கு பிரதான காரணமாகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் பொறியியல் படிப்பதற்கு வருகின்றனர். குறிப்பாக, பி.டெக் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு இந்தியாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 427 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 348 ஆக உயர்ந்துள்ளது. பி.டெக் பிரிவில் மட்டும் 9,053 பேர் சேர்ந்துள்ளனர். பி.எஸ்சி.யில் 3,964, பிபிஏ.வில் 3,290 பேர் சேர்ந்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் அடுத்த விருப்பமாக பிஇ உள்ளது. இதற்கு 2,596 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிபார்மா 2,451, பிஏ 2,295, பிசிஏவுக்கு 1,820 மாணவர்கள் வந்துள்ளனர். 2019-2020ம் ஆண்டில் 1,779 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்துள்ளனர். பி.எஸ்.சி.யில் 1,109 பேர், பல் மருத்துவத்தில் 651 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கல்வி தகவல் உடனுக்குடன் அறிந்துகொள்ள டெலிகிராமில் இணையுங்கள் https://t.me/TNEducationInf