சென்னை, ஜனவரி 24: அரசு பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் ஆணையிட்டனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.