Manarkeni Application
நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. நம்
கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவே.
இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 25.07.2023, செவ்வாய்க் கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வில் பங்கேற்று மணற்கேணி செயலியை வெளியிட்டு உரையாற்றவுள்ளார் UNCCD துணைப் பொதுச் செயலாலர்/ நிர்வாகச் செயலாளர் திரு. இப்ராஹிம் தயாவ் அவர்கள்.
வெளியீட்டு விழாவில் பங்கேற்று விழாப் பேருரை ஆற்றவுள்ளார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். மாண்புமிகு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.ராஜா ஆகியோரும் சிறப்புரை ஆற்றவுள்ளனர். நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா, உள்பட கல்வித்துறையின் உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.