நாகையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தாய்க்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை, தேர்வு கண்காணிப்பாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் 42 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுடன் தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதி வருகின்றனர். நேற்று நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலை பள்ளியில், ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு துவங்கியது. தேர்வு அறை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான தாள்களை, தேர்வு எழுதுபவர்களிடம் இருந்து கொடுத்து, கையெழுத்து வாங்கினார். அப்போது ஒரு மாணவி முகம் கவசம் அணிந்து இருந்ததால், சந்தேகட் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முக கவசத்தை அகற்றும்படி கூறியுள்ளார். நுழைவு சீட்டு சோதனை செய்ததில் வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு நபர் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், வெள்ளிப்பாளையத்தை சேர்ந்த செல்வாம்பிகை 25 என்பதும், தனது தாய் சுகந்திக்காக ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்ணை, வெள்ளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.