அரசு பள்ளிகளுக்கு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை என்ற புத்தகம் பள்ளிகளுக்கு ஓரு புத்தகம் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
136 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், தேசிய கல்விக்கொள்கை 2020ஐ விமர்சன ரீதியாக அணுகி, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. கல்வித்துறையில் சமத்துவத்தை பேணுவோம் என்ற அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து வரும் திமுக அரசு மற்றும் தமிழக முதல்வரை பாராட்டும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் இப்புத்தகம் வழங்கப்பட்டது. வாய்மொழி உத்தரவின்பேரில், கட்டாயமாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இப்புத்தகம் வழங்கப்படுவதாக, செய்தி வெளியானது. கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, நூலக புத்தகங்கள் மற்றும் டிஎன் ஸ்பார்க் புத்தகங்களுடன் இணைந்து, பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் இப்புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் அரசியல் புகுத்தக்கூடாது என்ற மரபு உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறையே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்ததக்கது என ஆசிரியர்கள் தொிவித்துள்ளனர். செய்தி தினமலர்.