அரசு பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்பு பிரிவுகளான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செங்கோட்டையன் பள்ளி கல்வி அமைச்சராக இருந்தபோது, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில், பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2,300 அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் செயல்பட தொடங்கின. இந்த அறிவிப்புக்கு, பெற்றோர் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.
இந்த வகுப்புகளை கையாள, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வந்த உபரி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அப்போது ஆசிரியர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், என்சிடிஇ ஆணையின்படி, மாண்டிச்சோரி படிப்பை முடித்த ஆசிரியர்கள்தான் நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அரசின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த, சிலா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர், தற்போதும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடந்தாண்டு, எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அரசு தரப்பில், மாண்டிச்சோரி படித்த ஆசிரியர்கள் தற்காலிக ஊதியத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கு நியமிக்கலாம் என கூறப்பட்ட வந்த நிலையில், தற்போது கல்வித்துறை உயர் அதிகாரிகள்,மாவட்ட அதிகாரிகளிடம் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என வாய்மொழியாக சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் மாணவர் சேர்க்கை என்று கூறிக்கொண்டு பெற்றோர் பள்ளிக்கு வந்தால், தலைமை ஆசிரியர்கள அவர்களை அங்கன்வாடி மையங்களுக்கு சென்று கேளுங்கள் என்று கூற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். இதனால், பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், ஆசிரியர்கள் நியமிக்க கூடுதல் செலவினம் ஏற்படும் என்ற அச்சத்தில், தமிழக அரசு மறைமுகமாக எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கு மூடு விழா நடத்தியுள்ளது.
அதே சமயத்தில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் பள்ளி கல்வித்துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அவரது செய்தியாளர் சந்திப்பில் தெளிவான பதில் இல்லை.