முன்பருவ கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகள் முதலமைச்சர் வாயிலாக நிறைவேற்றப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் பேசியதாவது, முன்பருவ ஆசிரியர்களை நாம் பெற்றோர்களாகத்தான் பார்க்க வேண்டும். ஏழை, எளிய, கூலி, விவசாய பெருமக்கள் உங்களை நம்பிதான் குழந்தைகளை விட்டுசெல்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை கல்வி மட்டும் புகட்டாமல், அவர்கள் பாராட்டி, சீராட்டி அன்பால் அரவணைக்கும் பெற்றோர்கள்தான் நீங்கள். குழந்தைகளை புரிந்துகொள்ள நான்கு அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். முதலாவதாக, குழந்தைகளின் வெளிப்படை செயல்களை அறிதல், அவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்க செய்தல், அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல், மற்றும் ஊக்கப்படுத்தல் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும். இவைகள் மூலமாக குழந்தைகளை வளர்த்து, அடுத்த வகுப்பிற்கு நகர்த்துபவர்கள் முன்பருவ கல்வி ஆசிரியர்கள். Read also: ஊதியம் உயர்த்தக்கோரி முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் மனுகுழந்தைகளை புரிந்துகொண்டு வழிநடத்தும் உங்களை கடந்த அரசு உங்களை புரிந்துெகாள்ளவில்லை என்பது உண்மைதான். முந்தைய ஆட்சியில், நடுநிலை பள்ளி வளாகங்கில் செயல்பட்ட அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றினர். அறிக்கை மட்டும் வழங்கிவிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஏற்கனவே பற்றாக்குறையாக இருந்த இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுத்துதான் மழலையர் வகுப்புக்கு அனுப்பினர். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. தொடக்கப்பள்ளிகளிலும் கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டிருந்தது. நமது ஆட்சி வந்த பிறகு, இல்லம் தேடி கல்வி மையங்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு முழுவதும் 2,381 மையங்களில் தன்னார்வலர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் முன்பருவ கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் முன்பருவ கல்வி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 5000 வழங்கப்படுகிறது. முன்பருவ ஆசிரியர்கள் கோரிக்கைகளான 5 ஆயிரம் ஊதியம் என்பதை அரசு உயர்த்தி வழங்குதல், அரசாைணயின் படி பணி நேரம் மாநிலம் முழுவதும் உறுதிப்படுத்துதல், மாணவர்களுக்கான உரிய இட வசதியுடன், பாடதிட்டம், பாடநூல்கள் வழங்குதல், பள்ளி கல்வித்துறையின் அடையாள அட்டை வழங்குதல், வேலை வாய்ப்பில் குறைந்தபட்ச இடஒதுக்கீடு அளித்தல் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. உங்களை காப்பாற்ற வேண்டியது, கோரிக்கை நிறைவேற்றுவது எங்களின் கடமை, கவலைப்பட வேண்டாம், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பள்ளி கல்வித்துறை முன்பருவ கல்வி ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கும், இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், சிகரம் சதிஷ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.