கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் மழலையர் வகுப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் எல்கேஜி, யுேகஜி பிரிவுகள் தற்காலிக ஆசிரியர்களால் கையாளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில் மழலையர் பிரிவுகள் காலை 9.10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வந்தாக கூறப்படுகிறது. அரசாணையின் படி, காலை 9.10 மணி முதல் 12.40 மணி வரை இயங்க வேண்டும் என்பதே விதி. குறிப்பாக, ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ 5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15 ஆயிரமாக நிர்ணயித்து, மாலை வரை மழலையர் பிரிவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட சமக்ரா சிக்ஷா அரசாணையின் படி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மழலையர் பிரிவு மதியம் 12.40 மணி வரை இயங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஆர்டிஇ இதனை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.