அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களில் நிரப்பவது தொடர்பாக சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணை ேபராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை மூடிவிடலாம் என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது எனவும், இதனை நிரப்பக்கோரி வசந்தகுமார் என்பவர் கடந்த 2018ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தற்போது நீதிபதி பட்டு தேவானந்த முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது, சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 15 சட்டக்கல்லூரிகளில், 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளது எனவும், 206 உதவி பேராசிரியர் பணியிடங்களில், 70 இடங்கள் காலியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் இது துரதிருஷ்டவசமானது, என்றார். இவ்வளவு காலிபணியிடங்கள் இருந்தால் மாணவர்கள் எப்படி தரமான கல்வி பெறுவார், அவர்கள் எப்படி சட்டத்தை பயில முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.இது இளம் வழக்கறிஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும் என்று கூறிய அவர், ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரி நடத்தி என்ன பயன், கல்லுாரிகளை இழுத்து மூடிவிடலாம் என்று அவர் தெரிவித்தார். மாணவர்கள் நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், இதுதொடர்பாக சட்டத்துறை செயலாளர் அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.