இணையதள தொழில்நுட்ப கோளாறு பி.எட் படித்த முதுநிலை பட்டதாரிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கல்வி தகுதி அடிப்படையில் தகுதி தேர்வுகளை நடத்துவதின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,098 காலிபணியிடங்களுக்கான நடப்பாண்டு தேர்வுகள் ஜூன் 26ம் மற்றும் 27ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் முறையில் மார்ச் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் மாத தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்ப பதிவு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாவும் விரைவில் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாட்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் தேர்வை தள்ளி வைக்க முயற்சிகள் நடக்கலாம். இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.