ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 7 ஆண்டு சான்று, இனி வாழ்நாள் சான்றாக செல்லுபடியாகும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது.
அதேபோல் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தியே பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்று 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதால், பணி நியமனம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் இந்த சான்றை வைத்து தனியார் பள்ளிகளிலும் பணியில் சேரலாம். ஆனால், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், அந்த சான்று இனி வரும் காலங்களில் 7 ஆண்டுக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றுகள் பெற்றுள்ளவர்களுக்கு 7 ஆண்டில் இருந்து வாழ்நாள் வரை செல்லுபடியாகும் வகையிலோ அல்லது புதிய வாழ்நாள் சான்றோ வழங்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் 7 ஆண்டுகள் முடிந்தவர்களுக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.