ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனா். சுற்றுபுற ஊர்களில் மேல்நிலைப்பள்ளி இல்லாததால், ஏனாதி, சித்திரங்குடி, எட்டிச்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய, தரமான கூடுதலான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மாணவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக, பாழடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து வருவதால், விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வகுப்பறையில் எந்த நேரமும் மாணவர்கள் அச்சடத்துடன் பாடங்களை கவனிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் தரப்பில் கூறும்போது, சில கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளது. கூடுதல் கட்டிடங்கள் இல்லாததால், சமூக இடைவெளி என்பது இங்கு கேள்விக்குறியாக உள்ளது. மற்ற வகுப்புகள் துவங்கினால், அமர கூட இடம் இருக்காது. இதுதவிர, அரசு கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த கட்டிடத்தின் மேற்கூரை, பக்கவாட்டு மற்றும் தரைதளம் சேதமடைந்து, விரிசலுடன் கிடக்கிறது. தேள், விஷபாம்புக்கு இங்கு பஞ்சமில்லை, இதை கண்டு நாங்கள் அடிக்கடி பதற வேண்டியதாக உள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை இதனை சீரமைக்க வேண்டும், எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை கட்டித்தர வேண்டும், குறிப்பாக பள்ளிக்கு தூய்மை பணியாளர்கள மற்றும் இரவு காவலர்கள் நியமித்து பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.