திருப்பூரில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு நடுரோட்டில் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி எதிரே உள்ள ரோட்டில் திடீரென இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் கையால் தாக்கிகொண்டனர். அங்கே இருந்த கடை உரிமையாளர்கள் அவர்களை விலக்கி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் விரட்டி விரட்டி தாக்கிகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆசிரியர்கள் அங்குவந்து அவர்களை விரட்டினர். இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் இருபிரிவுகளாக இருப்பதும், அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை தவிர போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.