கொரோனா காலத்தில் மூடப்பட்ட பள்ளிகள், பல்வேறு தளர்வுகளுக்கு பின் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 10, 12ம் வகுப்புகளுக்கு முதல் கட்டமாகவும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் வகுப்புகள் துவங்கப்பட்டன. இதேபோன்று, கல்லூரிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
தற்போது மூன்றாவது கட்டமாக, நடுநிலைப்பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகள் செயல்பட தொடங்கும். இதன் ஒரு பகுதியாக 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடதிட்டங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6, 7 மற்றும் 8ம் வகுப்புகள் அடுத்த மாதம் செயல்பட தொடங்கலாம் எனவும், இதற்கான அறிவிப்புகள் இந்த மாதத்திலேயே தமிழக அரசு வெளியிடலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது, பூஜ்யமில்லா கல்வி ஆண்டு தவிர்ப்பதற்காகவே பள்ளி கல்வித்துறை படிப்படியாக வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதே சமயத்தில் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அதாவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், கொரோனா தாக்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகள் உடல்நலத்தில் மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளோம். அதேபோன்று, பள்ளிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து உரிய பாதுகாப்பு வசதிகள் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்பது ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.