அரசு தேர்வுத்துறை இயக்குனா் முனைவர் சி. உஷாராணி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 21.02.2021 அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 15.02.2021 அன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தேர்வு மைய கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வுமையக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதாக என்பதையும் அம்மையத்திற்குட்பட்ட அனைத்து தேர்வர்களுக்கும் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வுகூடநுழைவுச்சீட்டு: மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 15.02.2021 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID/Password கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்காண் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை உரிய தேர்வர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு உரிய தேர்வு மையம் மற்றும் தேர்வு தேதியினை தெரிவிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளில் பெயர் / புகைப்படம் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிகப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.