அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்தால், தனியார் பள்ளி மாணவர்களை விஞ்சுவார்கள் என்பார்கள். அதுபோன்றுதான், அரசு பள்ளி மாணவர்கள் ஆங்காங்கே தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கை தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தேர்வாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ளது விடத்தாகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பில் படித்து வரும் மாணவிகளான பா.தேவகி மற்றும் க.குமாரபாரதி ஆகியோர் அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்துகொண்டு, நிலையான வாழ்விற்கு சூழலியல் மற்றும் பொருளாதாரத்தில் பனையின் பங்களிப்பு எனும் தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து அசத்தினர். மாணவிகள் தங்களது ஆய்வறிக்கையில், தலைப்பிற்கு ஏற்றவாறு ஆராய்ந்து தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். அதன்படி மாணவிகளின் ஆய்வறிக்கை தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவிகள் இருவருக்கும் கல்வி அதிகாரிகள், அப்பகுதி மக்கள் என பலர் அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்த ஆய்வறிக்கையை தயாரிக்க உதவிய, பள்ளி தலைமை ஆசிரியர் நா.மீனாம்பிகை, வழிகாட்டு ஆசிரியராக ச.முத்துகுமாரி ஆகியோர் மாணவிகளை ஊக்கப்படுத்தி பாராட்டினர்.