கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு, கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று, பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்து தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும், தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள். இதில் தங்களின் சின்னஞ் சிறு கனவுகளை அடைவதற்காக, சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளை செல்வங்களை அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலக பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று அனுப்பிவைக்கப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்து கொள்கிறேன், இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.