தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் எவ்வித அறிவிப்பு இல்லாததால் தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் முன்பருவ கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தனது இறுதி ஆண்டு நோக்கி நகரும் ஆட்சியில், அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறிப்பாக, பல ஆண்டுளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் அவர்கள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த பட்ஜெட்டிலாவது பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியாகலாம் என்று அவர்கள் நம்பி இருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதைபோல், நடுநிலை பள்ளி வளாகத்தில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி மையங்களில் பணியாற்றும் முன்பருவ கல்வி ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு, வேலை நேரம் உள்ளிட்டவை கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை கல்வி அமைச்சருக்கு நடத்தினர். அதில் தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறிய நிலையில், அவர்கள் சார்ந்த எந்த கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது அவர்கள் மத்தயில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.