கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பெண் ஆசிரியைகளுக்கு படுஜோராக பேரத்துடன் சேலை விற்பனை நடந்ததாக வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியாக கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சில ஆசிாியைகள் பாட இடைவேளையின்போது, சேலை விற்கும் நபரை நேரடியாக பள்ளியில் அனுமதித்து, விற்பனை செய்யும் வீடியோ காட்சி சக ஆசிரியர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ஆசிரியர்கள் முக்கியமான கடமை மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, ஒழுக்கத்தை கற்பிப்பதே. இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நிர்வாக பணியால் ஆசிரியர்களாலும் பாடத்தை முழுமையாக கற்றுத்தர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அந்நிய நபர்களை பள்ளி வளாகத்தில் நுழையவிடுவதே மிகப்பெரிய விதிமீறல். ஏனென்றால், மாணவர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், சேலை விற்பனை பிரதிநிதியை எவ்வாறு பள்ளிக்குள் அனுமதித்தினர், பின்னர் அவர் எப்படி வகுப்பறைக்குள் சென்று, நேரடியாக ஆசிரியைகளிடம் சேலையை விற்பனை செய்கிறார். குறிப்பாக வகுப்பறையில் நின்று ஆசிரியைகள் சிலர் பேரம் பேசுவது அதிர்ச்சியை கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது பள்ளி மற்றும் மணவர்களின் வகுப்பறை கல்வி சூழலை பாதிக்கும். இதுபோன்ற செயலை அனுமதித்து, ெமத்தனத்துடன் பணியாற்றிய தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை வலியுறுத்தி உள்ளனர்.