கொரோனாவால் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஆன்லைன் கல்வி முழுமையாக கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளி திறப்பு குறித்து அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. மாநில அரசுகள், கொரோனா தாக்கத்தை அறிந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன, சில மாநிலங்கள் திறக்கவில்லை. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யலாயா (kendriya vidyalaya) பள்ளிகள் கடந்த அக்டோடர் மாதம் முதல் படிப்படியாக சில மாநிலங்களில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கேந்திாிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் நேரடி வகுப்பில் பங்கேற்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை சேகரித்தது. அதன்படி பிப்ரவரி 11ம் தேதி நிலவரப்படி மாணவர்கள் வருகை விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தற்போது, வெளியிட்டுள்ளது. புள்ளி விவரப்படி கேந்திரிய பள்ளிகளில் மட்டும், 9ம் வகுப்பில் 42 சதவீதம் பேர் பள்ளிக்கு வருகின்றனர், 10ம் வகுப்பில் 65 சதவீதம் பேர், 11ம் வகுப்பில் 48 சதவீதம் பேர், 12ம் வகுப்பில் 67 சதவீதம் பேர் பள்ளிக்கு வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் அதன் கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், சில மாநிலங்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதாகவும், அனைத்து கேந்திரிய பள்ளிகளில் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக இடைவௌி உள்ளிட்டவை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக பாடங்கள் நடத்த வேண்டும் எனவும், மாணவர்கள் கல்வி செயல்பாடுகளை கவனிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.