காவேரிபட்டணம் அரசு பள்ளியில் போலி சான்றிதழ் மூலம் பணியாற்றி தலைமை ஆசிரியர் தற்போது சிக்கியுள்ளார். தலைமறைவான அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த தாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (48). இவர் காவேரிபட்டணத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதிக்கு புகார் சென்றது. அதன்பேரில், அவரது சான்றிதழ்களை சரிபார்த்து விசாரணை நடத்தியதில், சங்கர் காவேரிபட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளயில் 1990-92ம் ஆண்டு பிளஸ் 2 படித்துள்ளார். அப்போது, பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 307 மதிப்பெண்ணும், கணிதத்தில் ஒரு மதிப்பெண்ணும் வாங்கியுள்ளார். அந்த மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து ராணிபேட்டையில் உள்ள தனியார் ஆசிரியர் பள்ளியில் பயிற்சி பெற்றார். இதையடுத்து போலி சான்றிதழ் காண்பித்து 1997ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக சேர்ந்தார். 2006ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி காவேரி பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த துணை ஆய்வாளர் கண்ணன் தலைமறைவாக உள்ள சங்கர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். போலி சான்றிதழ் கொடுத்து சுமார் 24 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளியில் பணியாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமாக இவரால் மட்டும் அரசு பணிக்கு வந்திருக்க முடியாது, நிச்சயமாக இவருக்கு அரசியல் புள்ளிளோ, அதிகாரிளோ பணத்தை பெற்றுக்கொண்டு அரசு பணி வழங்கியிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். கணிதத்தில் ஒரு மதிப்பெண் பெற்றுக்கொண்டு பணியில் சேர்ந்தது உட்சபட்ச கொடுமை, கடந்த 24 ஆண்டில் எத்தனை மாணவர்களின் அறிவுதிறனை வீணடித்தாரோ?. இந்த சங்கரை போன்று கல்வித்துறையில் இன்னும் எத்தனை போ் திரைமறைவில் நின்று பணியாற்றுகிறார்களோ, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.