You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Kamarajar Kalvi Valarchi Naal Katturai | கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

Kamaraj Book PDF Download in Tamil

நான் விரும்பும் தலைவர் காமராஜர் 

 

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சா்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுவர், ‘பெருந்தலைவர் காமராஜர்‘. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர், கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜர் அவர்களை பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் கிங்மேக்கராகப் போற்றப்படும் காமராஜரின் வாழ்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.

பிறப்பு– ஜூலை 15, 1903 

இடம்- விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி- அரசியல் தலைவர், தமிழக முதல்வர் 

இறப்பு- அக்டோபர் 2, 1975

நாட்டுரிமை- இந்தியன்

Read Also: Kamaraj Book PDF Download in Tamil 

Read Also: காமராஜர் கட்டுரை வரிகள்

பிறப்பு

கு காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள விருதுநகரில் குமாரசாமி – சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி, அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை ராஜா என்று அழைப்பார். அதுவே பின்னர் (காமாகூி – ராஜா) காமராஜர் என்று பெயர் வரக்காரணமாக அமைந்தது. 

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

காமராஜர் அவர்கள் தனத ஆரம்பகல்வியை தனது ஊாிலேயே தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யா சாலையில், சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளியான சத்திரி வித்யா சாலா பள்ளியில் சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர் தன்னுைடய மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

விடுதலை போராட்டத்தில் காமராஜரின் பங்கு

டாக்டர் வரதராஜூலு நாயுடு, கல்யாண சுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஹோம் ரூல் இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு இந்திய நேஷனில் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்கிரஹத்தின் ஒரு பகுதியாக 1930ஆம் ஆண்டு, சி ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, காந்தி இா்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள் சென்னையில், வாள் சத்தியாக்கிரகத்தை தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கினார். மேலும், ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறையில் சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு

காங்கிரஸ் தலைவர், இந்திய விடுதலை வீரர், இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர், மிகச்சிறந்த பேச்சாளர் என புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜர் செயலாளராக நியமித்தார். இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமின்றி, காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜா்

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்தது. இதனால் ராஜாஜி அவா்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால் 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

 

முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்

 

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகுவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர் தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். மேலும் 17,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு மட்டுமின்றி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயேரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக இருந்தது.

தொழில் வளர்ச்சி திட்டங்கள்

காமராஜா் கல்வித்துறையில் மட்டுமின்றி, தொழில்துறை, நீர்பாசன திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கினார். நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூா் ரயில்பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணுமின் நிலையம், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, ேசலம் இரும்பு உருக்கு ஆலை, பாரத மிகு மின் நிறுவனம், இரயில் பெட்டி தொழிற்சாலை, நிலக்கரி புகைப்பட சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலை காமராஜரால் உருவாக்கப்பட்டுள்ளன. இதை தவிர மேட்டூா் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும் ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்தது.

 

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியும் முக்கியம் என கருதி கே பிளான் எனப்படும் காமராஜா் திட்டத்தினை கொண்டுவந்தார். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். அதன்போில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியை துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு டெல்லிக்கு சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 

இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு. கே பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞா்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964ஆம் ஆண்டு, ஜவஹா்லால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்தரியின் திடீர் மரணத்தை தழுவ 48வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திரகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

 

இறப்பு

 

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூக தொண்டு செய்வதிலேயே அா்பணித்துக்கொண்ட காமராஜா் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தன்னுடைய 72 வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூக தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேேய வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் ரூ 150 மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமில்ல உலக வரலாறு இனி சந்திக்குமோ என்பதே சந்தேகம்தான்.

இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, இந்தியாவின் கிங்மேக்கராகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும், படிக்காத மேதையாகவும், கல்வியின் நாயகனாகவும், மனித நேயத்தின் மறு உருவமாகவும் திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் கதநாயர்கள் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையாகன ஹீரோகவாக வாழ்ந்து காட்டியவர். அரசியல் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

உன்னைபோல் அரசியல்வாதி உலகில் இல்லை நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை.