கோவை மாவட்டம் கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 5-வது முறையாக, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரியில் நடந்தது. இதில் 5 வகைகளில் 36-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நாடகத்தில் பாவனை நடிப்பு, குழு நடிப்பு, பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகள் நடத்தப்பட்ட போட்டியில், குழு நடிப்பில் கல்வீரம்பாளையம் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குழு நாடகப் பிரிவில் பல்வே பள்ளிகள் பங்கெடுத்தாலும், கோவை கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது. பள்ளி மாணவிகள் சுபஸ்ரீ, ப்ரீத்தி, அசோக், ஸ்ரீதர், பிரதீப் ஆகிய 5 பேர் கொண்ட குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றது. ஸ்ரீதர் மட்டும் பிளஸ் 1 மாணவர். மற்றவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5-ம் ஆண்டாக மாநில அளவிலான நாடகப் பிரிவில் இந்த பள்ளி முதலிடம் பிடித்து வருகிறது. இளையோர் திறன் என்ற கதைக்களத்தில் மாணவர்கள் தங்களது அசத்தியமான திறமையை வெளிப்படுத்தினர்.பயிற்சி தரும் ஆசிரியை வை சசிகலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எல் சிவக்குமார் தரும் உற்சாகமும், ஊக்கமும் எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது என்று மாணவர்கள் கூறினர்.