கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பள்ளி சூறையாடல், காவலர் மீது தாக்குதல், துப்பாக்கி சூடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூரில் சக்தி இன்டா்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மேலும் அந்த மாணவி, பள்ளி விடுதியில் தங்கயிருந்தவாறு, படிப்பை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று, மாணவி விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் வீட்டாருக்கு பள்ளி தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே சிறுமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, உடற்கூறு ஆய்வுக்காக கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் இறப்புக்கு நியாயம் கோரி, மாணயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையில், இந்த போராட்டம் இன்று காலை முதல் கலவரமாக மாறியுள்ளது. சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்று சேர்ந்த இளைஞா்கள் பள்ளியை சூறையாடினர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி வாகனத்திற்கும் தீ வைத்தனர். மேலும் காவலா் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் டிஐஜி பாண்டியன் உள்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏராளமானோர் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு சற்று முன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அதுகுறித்து புலன் விசாரணை செய்யப்படும். மாணவி தனது இறப்பு கடிதத்தில் கணிதம், வேதியியல் பாடங்கள் கடினமாக இருந்தது என தெரிவித்துள்ளார், வேறு குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டு அதில் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.