Kalai Thiruvizha | கலை திருவிழா கடுப்பாகும் ஆசிரியர்கள்
Kalai Thiruvizha
கலை திருவிழா போட்டிகளுக்கு, ஒவ்வொரு பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்களை அழைத்து செல்ல வேண்டியிருப்பதால், பேருந்து வசதி ஏற்பாடு செய்ய முடியாமல், ஆசிரியர்கள் அல்லல்படுகின்றனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கவின்கலை, நடனம், நாடகம் என ஆறு பிரிவுகளின் கீழ் 36 போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஓன்பது பிரிவின் கீழ் 90 போட்டிகளும் பள்ளி அளவில் நடத்தி, முதல் பரிசு பெற்றவர்களுக்கு, இன்று முதல் வட்டார அளவிலான போட்டிகள் நடக்கிறது.
Read Also: கலை திருவிழா அரசு பள்ளியில் தொடக்கம்
கோவை மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் தனித்தனியாக பள்ளிகள், கல்லூரிகளில் இப்போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையும் இந்த போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து மட்டும் சுமார் 120 மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்து, குறைந்தபட்சம் இரு பேருந்துகள் வைத்துதான், மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்ல முடியும். இதற்கு நிதியின்றி ஆசிரியர்கள் தள்ளாடுகின்றனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், வட்டார வாரியாக போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களை எப்படி அழைத்து செல்வது என்பதுதான் எங்களுக்கு தெரியவில்லை.
ஆலாந்துறை பள்ளியில் இருந்து, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கல்லூரிக்கு அழைத்து செல்ல அரசு பேருந்து வேண்டும் என்று, சாய்பாபா காலனியில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை அணுகியபோது, 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து வசதி ஏற்படுத்தாமல், மாணவர்களை போட்டிகளில் எப்படி பங்கேற்க செய்ய முடியும்.
இதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தந்திருக்க வேண்டும். இரு வார காலத்தில் அரையாண்டு தேர்வும் வர உள்ளது. இன்னும் பாடங்களை முடிக்கவில்லை. ஆகவே, தேர்வு விடுமுறையின்போதோ அல்லது பள்ளி திறந்தே பிறகோ இப்போட்டிகளை நடத்தியிருக்கலாம் என்றார்.