Read Also: தற்காலிக ஆசிரியர் பணி அறிவிப்பு
குறிப்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பல தன்னார்வலர்கள் மதிப்பூதியத்தை பெரிதாக கருதாமல் தன்னலமாக மாணவர்களுக்கு கற்பித்தல் சேவை செய்து வருகின்றனர். இதுதவிர புத்தக வாசிப்பு, கதை சொல்லுதல், ஓவியம் கற்பித்தல், புதிர் போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல கற்பித்தல் செயல்பாடுகளை செய்து வருகின்றனர். இன்றும் கூட பல தலைமை ஆசிரியர்கள் இவர்களுக்கு எதிரான விரோத போக்கு அதாவது இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பள்ளியில் இடம் வழங்காமல் இருப்பது, மறைமுகமாக மாணவர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறுவது உள்ளிட்ட பல பிரச்னைகளை சமாளித்து கொண்டும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்திய ஆய்வு முடிவுகளும் இல்லம் தேடி கல்வியால் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இருந்து பல தன்னார்வலர்களுக்கு மாதக்கணக்கில் மதிப்பூதியம் வழங்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தன்னார்வலர் ஒருவர் கூறும்போது, மாணவர்கள் பாடங்கள் கற்பிக்கும்போது, நாங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பூதியத்தை பெரிதாக எண்ணவில்லை. இந்த சேவை மிகப்பெரிய மனநிறைவு அளிக்கிறது. அதே சமயத்தில் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு, ஒதுக்கிய நிதியில், தன்னார்வலர்களுக்கு முறையாக மதிப்பூதியம் வழங்கப்படுவது இந்த அரசின் அடிப்படை கடமை என்பதை மறக்கக்கூடாது. தற்போது சில தன்னார்வலருக்கு மதிப்பூதியம் முறையாக வழங்கப்படுகிறது. சில தன்னார்வலர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இன்னும் ஒரு சிலருக்கு தொடக்கத்தில் இருந்து மதிப்பூதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மதிப்பூதியம் வழங்கப்்படாதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டார் அவர்கள் ஆப்பில் (செயலி) முறையிடுங்கள் என்று கூறுகின்றனர். செயலியில் குறைகளை தெரிவித்தால், எந்த தீர்வும் கிடைப்பதில்லை. இதனால் பல தன்னார்வலர்கள் அலுவலர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பிரச்னையை களைய, இந்த திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத், வட்டாரம் வாரியாக தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம் மாத கணக்கில் வழங்கப்படாதது, முழுமையாக மதிப்பூதியம் வழங்கப்படாதது ஆகிய தகவல்களை சேகரித்து மதிப்பூதியம் வழங்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். முன்பு போல் இளம்பகவத், இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்துவதில்லை என்றும், தன்னார்வலர்கள் குறைகளுக்கு தீர்வு காண முன்வருவதில்லை என்றும், தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.