மாநில திட்ட இயக்குனர் திங்கட்கிழமை (6.1.2025) அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, காரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.
2024-2025 கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி மையங்கள் சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி திட்டத்தனை செயல்படுத்த உறுதுணை புரிவதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். தற்பொழுது மாணவர்கள் நலன் கருதி இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை 6.1.2025 அன்று மாற்று பணியிலிருந்து விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை செயல்படுத்த உறுதுணை புரிவதற்காக நன்கு ஆர்வம் ஈடுபாடு மிக்க தன்னார்வலா் ஒருவரை மாவட்டத்தில் நியமிக்க வேண்டும். இவர்களுக்கு மதிப்பூதியமாக ரூ 12,000 வழங்கப்படும். எனவே மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்று பணியிலிருந்து விடுவிக்கவும், மாவட்ட அளவில் நன்கு ஆா்வம் ஈடுபாடு மிக்க தன்னார்வலர் ஒருவரை நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.