தமிழக அரசு நீட் தேர்வு (NEET) எழுதும் அரசு மற்றும் உதவிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டு நீட் பயிற்சி வகுப்புகள் இணையதளம் வாயிலாக (online) நடந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், நீட் பயிற்சி வகுப்புகள் வெற்றிக்கு கைக்கொடுத்தது என தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நலன் கருதி, ஐஐடி, ஜேஇஇ (IIT, JEE) போன்ற போட்டித்தேர்வுகள் மூலமாக வெற்றிபெற்று, மத்திய அரசின் இந்திய தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில வேண்டும் என்ற நோக்கத்துடன், டெல்லியை மையமாக வைத்து செயல்படும் M/s Nextgen Vidhya Private Limited என்ற நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை பிரிவில் (11 மற்றும் 12ம் வகுப்பு) பயிலும் மாணவர்களுக்கு IIT, JEE போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த பயிற்சி மாணவர்கள் மத்தியில் மன உறுதியுடன் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு, பள்ளி கல்வி இயக்குனர் ச. கண்ணப்பண் IIT, JEE பயிற்சி வகுப்பு குறித்து தலைைம ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். மேலும், அவர், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் விவரங்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் கேட்டுள்ளார்.