தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம், தமிழகத்தில் 31,332 அரசு தொடக்க, நடுநிலைப்பபள்ளிகள் உள்ளன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 18 லட்சத்து 46,550 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் பல பள்ளிகளில் ஒற்றை இலக்கை எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகள் கூட உண்டு. அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் 207 பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கல்வி அதிகாாிகள் கூறியதாவது, நான்கு ஆண்டுகளுக்கு முன், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனா முடிந்த பின், மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுத்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு, ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்பதால், 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள், வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுவிட்டனர். இப்பள்ளிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் மாவட்டம் வாரியாக மூடப்பட்ட பள்ளி விவரம் - நீலகிரி 17, சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை 10, ஈரோடு 10, மதுரை 10, கோவை 9, ராமநாதபுரம் 9, தூத்துக்குடி 8, தர்மபுரி 7, திருப்பூர் 7, விருதுநகர் 7, கள்ளக்குறிச்சி 6, சேலம் 6, வேலூர் 6, நாமக்கல் 6, கிருஷ்ணகிரி 5, திருச்சி 6, திருநெல்வேலி 5, செங்கல்பட்டு 4, கன்னியாகுமரி 4, கரூர் 4, தஞ்சாவூர் 4, திருவள்ளூர் 4, விழுப்புரம் 4, திருவண்ணாமலை 4, புதுக்கோட்டை 3, ராணிப்பேட்டை3, தேனி 3, கடலூர் 2, தென்காசி 2, திருப்பத்தூர் 2, காஞ்சிபுரம் 2, நாகப்பட்டினம் 1 திருவாரூர் 1.