பள்ளி சுகாதாரம் எவ்வாறு திறம்பட பராமரிப்பது? | How to Maintaining Hygiene in Schools Effectively?
இந்த பதிவில் நாம் எப்படி சுகாதாரத்துடன் பள்ளியை பராமரிப்பு என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த பதிவு பள்ளி மேலாண்மை குழுவில் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பதவினை அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி சுகாதாரம் - Healthy Food
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படைத் தேவை சுகாதாரமான உணவே. ஒவ்வொருவரும் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
• பச்சைக் காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள் நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே சமைத்தல் வேண்டும்.
• கெட்டுப்போன உணவு, அழுகிய காய்கறிகள், பழங்கள், தரையில் விழுந்த உணவு மற்றும் மீதியான உணவை உட்கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். இதனால் நோய்கள் ஏற்படுவதையும் நோய் பரவுவதையும் தவிர்க்கலாம்.
பள்ளி சுகாதாரம் - சுகாதாரமான உணவு வழங்குதல்
1. சத்துணவு மையத்தில் உள்ள சமையல் பாத்திரங்களை நன்றாகச் சுத்தம் செய்தல்.
2. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களைச் சுத்தம் செய்தல்.
3. அவற்றைச் சுத்தமாகச் சமைத்தல்.
4. மாணவர்கள் தட்டு மற்றும் கைகளைச் சுத்தமாகக் கழுவுதலை உறுதிசெய்தல்.
5. மாணவர்களைச் சுத்தமான இடத்தில் அமரவைத்து பரிமாறுதல்.
இவற்றை பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள் கண்காணித்தல்.
பள்ளி சுகாதாரம் - சுகாதாரமான குடிநீர்
READ ALSO | பள்ளி மேலாண்மை குழு தரக்கண்காணிப்பு முறைகள்
• ஆறு, கிணறு, குளம் இவற்றிலிருந்து பெறும்நீர் பார்வைக்குச் சுத்தமானதாக இருந்தாலும் நோய்க் கிருமிகள் மற்றும் மலத்துகள்கள் கலந்திருக்கும். இக்கிருமிகள் அல்லாத நீரே பாதுகாப்பான குடிநீர் ஆகும்.
• பாதுகாக்கப்படாத நீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி, சீதபேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு, இளம்பிள்ளை வாதம் மற்றும் குடற்புழுத்தொற்று போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, நாம் எப்பொழுதும் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி மூடி வைத்துள்ள பாதுகாப்பான நீரையே பருக வேண்டும்.
• தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் வளர்ந்து, யானைக்கால் வியாதி மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்புகின்றன. தேங்கியிருக்கும் மழைநீர் மற்றும் வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நீரில் அனோபிலிஸ் வகைக் கொசுக்கள் மலேரியாவையும், ஏடிஸ் வகைக் கொசுக்கள் சிக்குன் குனியா மற்றும் டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்களையும் பரவச் செய்கின்றன. சுகாதாரமான குடிநீர் வழங்குதல்
1. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குதல்.
2. வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து பெறப்படும் குடிநீரை வழங்குதல்.
3. சத்துணவு மையத்தில் தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டி வழங்குதல்.
சுகாதாரமான கழிப்பறை திறந்த வெளியில் கழிக்கப்படும் மலத்தினால் பலவித நோய்கள் பரவுகின்றன. எனவே, கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் அமைத்தல் வேண்டும்.
பள்ளி சுகாதாரம் - சுகாதாரமான கழிப்பறைப் பராமரிப்பு
1. கழிவறைகளை நாள்தோறும் கழுவி பினாயில் கொண்டு சுத்தம் செய்தல்.
2. கழிப்பறைக்குத் தண்ணீர் வசதி செய்தல்.
3. மாணவர் கை கழுவத் தேவையான தண்ணீர், சோப்பு மற்றும் டவல் (துவாலை) வழங்குதல்.
4. நாப்கின் எரியூட்டியைப் பயன்படுத்துதல்.
5. உறிஞ்சுக்குழியை அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்தல்.
6. சுகாதாரமான கழிப்பறையைப் பராமரிக்க தேவைப்படும் பொருள்களை பயன்படுத்துதல்.
பள்ளி சுகாதாரம் - சுற்றுச்சூழல்
• ஓவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டப்பட்டு அதையே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்துதல்
• குடிநீர் சேகரிக்கும் இடங்கள், வடிகால்கள் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரித்தல்.
• குப்பைகளை இனம் பிரித்து அகற்றுதல் (மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை).
• கிராமத்தில் உள்ள பொது இடமான பேருந்து நிலையம், கோவில்கள், நீர் நிலைகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரித்தல்.
• கிராம குடிநீர் மேல்நிலைத் தொட்டியை மாதம் இருமுறை சுத்தம் செய்தலைக் கண்காணித்தல்.
• வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தல்.
• கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு அக்கிராமத்தில் உள்ள சுகாதாரக் குறைகளைச் சீர்செய்ய இணைந்து செயலாற்றுதல்.
• நெகிழி (பிளாஸ்டிக், பாலிதீன்) பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் டையாக்சின் என்ற நச்சு வாயு காற்றில் கலக்கிறது. இதனை சுவாசிப்பதால் நுரையீரல் புற்று நோய், பிறப்பிலேயே ஊனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை எரிப்பதைத் தவிர்த்தல்.
பள்ளி சுகாதாரம் - பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு/ பணிகள்
• பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக சுத்தம் செய்து கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி அங்குள்ள தளவாடச் சாமான்கள், உபகரணங்கள், எழுது பொருட்கள், சேமிப்பு கிடங்குகள், தண்ணீர் தொட்டிகள், சமையலறைகள், உணவகங்கள், கழிவறைகள், பரிசோதனை கூடங்கள், நூலகங்கள் போன்றவை சுத்திகரிக்க ஏற்பாடு செய்தல் மற்றும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்தல்.
• கை கழுவும் இடங்கள் அனைத்திலும் சோப்பும் சுத்தமான தண்ணீரும் இருப்பதை கண்காணிக்க பள்ளியில் தூய்மைப்பணியாளர்கள் அல்லது அதற்கென வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் நபர்கள் இருப்பதை உறுதி செய்தல்.
• முறையான கால இடைவெளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் திட்டமிட்ட நெறிமுறைகளின்படி உடல் சமூக இடைவெளிவிட்டு கை கழுவுவதை உறுதி செய்தல்.
• மதிய உணவு சமைக்க வருகை தரும் சமையல்காரர் அல்லது உதவியாளர் கோவிட்-19 தொற்று இல்லாதவர் என்பதை உறுதி செய்து அவருக்கு பாதுகாப்பு மேலாடை, தலைக்கவசம் வழங்குவதில் உதவுதல்.
• தினமும் மதிய உணவு சமைக்கும் முன்பும் பின்பும் சமையலறையையும், தரையையும், சமையல் மேடையையும் சுத்தம் செய்வதை உறுதி செய்தல்.
• மாணவர்கள் தங்கள் வீட்டில், நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கற்பித்துப் பின்பற்றச் செய்யவும், கோவிட் தொற்று இல்லாத பள்ளியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.