தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, அதன்பின் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு, தற்போது செமஸ்டர் தேர்வுகள் துவங்க உள்ளது.
அதே உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்போடு நின்றுள்ளது. கடந்த மாதம், உயர் கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் முதலாம் ஆண்டு பி.எட் படிப்புகளில் சேர டிசம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவ, மாணவிகள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். அதன்படி மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, பி.எட் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், தற்போது வரை மாணவா் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி குறித்து உயர்கல்வி வெளியிடாமல் உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள், இந்த ஆண்டு வகுப்பு நடக்குமா அல்லது நடக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால், மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அழைத்த எப்போது கலந்தாய்வு நடக்கும் என்று தொலைபேசியில் அழைத்து, கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அடுத்த அறிவிப்பாக ஜனவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை எம்.எட் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இருக்கும் அரசு கலைக்கல்லூரி, பி.எட் கல்லூரிக்கு இடையே அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், முதலாமாண்டு சேர விண்ணப்பித்த மாணவர்களின் படிப்புக்கு பாதகம் வந்துவிடுமோ என பேராசிரியர்கள் புலம்புகிறாா்கள். உயர்கல்வித்துறை எப்போது மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் காத்திருக்கின்றனர்.