மகப்பேறு விடுமுறையில் இருந்த முன்பருவ கல்வி ஆசிரியரை தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்தது முன்பருவ கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலை பள்ளி வளாகத்தில் மழலையர் பிரிவில் ஒரு பெண் ஆசிரியை பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருடன் இரண்டு ஆசிரியைகள் மழலையர் பிரிவை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், மகப்பேறு காரணங்களால் அந்த ஆசிரியை தலைமை ஆசிரியையிடம் விடுமுறை கேட்டு கடிதம் அளித்தார். அப்போது, மகப்பேறு விடுமுறை எடுத்தால், மறுபடியும் பணியில் சேர்க்க முடியாது என தலைமை ஆசிரியை அடாவடியாக கூறியதாக தெரிகிறது. அதற்கு ஆசிரியை மூன்று மாதத்திற்குள் பணிக்கு வந்துவிடுவதாகவும், இரண்டு ஆசிரியைகள் வகுப்பை கவனித்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு தலைமை ஆசிரியை மறுப்பு தொிவித்து, கெடிபிடி காட்டியுள்ளார். பெண் ஆசிரியையும் விடுப்பில் சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியை அந்த முன்பருவ கல்வி ஆசிரியை பணியிலிருந்து நீக்கிவிட்டார். மேலும், அவரது பெயா் எமிஸ் தளத்திலும் நீக்கப்பட்டதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியிடம் கூறியதற்கு, அவர் முன்பருவ கல்வி ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில் வேலையில் இருப்பீங்களா, இல்லை என நக்கலாக பதில் அளித்துள்ளார். இதனால், அந்த ஆசிரியை தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார். இந்த சம்பவம் முன்பருவ கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.