சென்னை, டிசம்பர் 9 - வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் மாணவிகளை தரக்குறைவாக நடத்துவதாகவும், ஆபாசமாக திட்டுவதாகவும் கூறி, கல்வி அலுவலர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்துள்ள மேல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் 150 மாணவிகள் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் பெண் தலைமை ஆசிாியை மாணவிகளிடம் வழக்கமாக தரக்குறைவாகவும் நடத்துவதாகவும், சில சமயங்களில் வாய்க்கு வந்தபடி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட் ஒரு மாணவி, தனக்கு விடுமுறை வேண்டும் என்று தலைமை ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளார். விடுமுறை மறுத்ததோடு மட்டுமின்றி, அந்த மாணவியை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. மாணவியின் உடல்நிலை மோசமாக இருந்ததை அறிந்த, வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி மற்றும் ஆவேசம் அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியையிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால், பள்ளியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் பள்ளிக்கு விரைந்து வந்து, பெற்றோரிடம் சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினர். இதுதொடர்பாக, அவா் தலைமை ஆசிரியையிடம் விசாரணை செய்தார். இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிாியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.