ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது. அவர்களுக்கு இம்மாதம் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பாட திட்டத்தில் படிக்கும் 10ஆம், பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு பொது தேர்வு வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. பொது தேர்வு பணி முடிந்ததும், விடைத்தாள் திருத்தும் பணி உள்ளதால் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்காத சூழல் உள்ளது. எனவே பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், அதன் மாநில பொதுச்செயலர் பிரபாகரன் மனு அளித்துள்ளார். அதில் வரும் கல்வியாண்டில், ஆசிரியர்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்றும் வகையில், மேல்நிலைப்பள்ளி ஆசிாியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.