மாங்கனிக்கு பெயர் போன மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு முன்னோடி அதிகாரியாக வந்த இவர், பேசும்போது, ஆசிரியர்கள் மீது மரியாதையை அள்ளி தெளிப்பதில் இவருக்கு அவ்வளவு அளவில்லா ஆனந்தமாம்.
இதனாலயே, அங்குள்ள ஆசிரியர்கள் இவருக்கு மரியாதை நாயகன் என செல்லப் பெயர்கள் வைத்துள்ளார்களாம். அதாவது, ஆசிரியரிடம் பேசும்போதே, ஏய், என்ன, அப்புற.. ஆஹா, ஹ், நீ இங்கிட்டு வா, போ, போ, வந்துட்ட பெரிசா பேசுறதுக்கு என மரியாதையாகத்தான் பேசுவாராம்ல்ல... இவரது அடாவடி பேச்சால், ஆடிப்போன ஆசிரியர் பெருமக்கள் செய்வதறியாமல், புலம்பி தவிக்கின்றனர். இதனையும் தாண்டி, ஒரு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரடியாக போய் சந்தித்து, அய்யா, ஆசிரியர்களிடம் பேசும்போது கனிவுடன் பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவே, மரியாதை நாயகன், நீங்க வேணா என்ன வேற மாவட்டத்திற்கு மாத்திடுங்க என ஒரே போடு போட்டறாம். ஆடிபோன ஆசிரியர் சங்கத்தினர் அங்கிருந்து நடையை கட்டினார்களாம். ஆசிரியர்கள் நம்மிடம் கூறியதாவது, திரைப்படத்தில் வசனம் வருவதுபோல், பையன்னெல்லாம் நல்ல பையதான், என்ன மூளை மட்டும் சரியில்லை என்பதை போல, இந்த அதிகாரி நல்ல அதிகாரிதான், ஆனா என்ன வாய்தான் சரியில்லை என்ற ஞாபகம்தான் வருகிறது. அவரின் பதவி உயர்வாக இருந்தாலும், அவரும் எங்களை போலவே ஒரு அரசு ஊழியர்தான். இருவருமே மக்கள் வரிப்பணத்தில்தான் சம்பளம் பெறுகிறோம். ஆனால், எவ்வித அடிப்படை அறம் இல்லாமல், வயது மூத்தோர், இளையோர், பெண்கள் என்று பாராமல், அவருக்கு கீழ் பணியாற்றுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அனைவரும் வாய்க்கு வந்தபடி ஒருமையில் பேசுவது வாடிக்கையாக கொண்டுள்ளார், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதேபோன்று, இவர் உயர் பதவியில் உள்ள இணை இயக்குனர், கமிஷனர், செயலர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் மரியாதை இல்லாமல் பேசுவாரா?. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தவறு செய்வது அல்லது கடமை செய்ய மறுக்கும்போது, கொடுக்கப்பட்ட அளவீடுகள் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் எந்த குறையும் அவர் மீது சொல்லவில்லை. ஏனென்றால், அது அவரது பணி. ஆனால், அதற்காக அனைவரையும் அடிமைபோல் பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. இதுதவிர, இவர் சனி மற்றும் ஞாயிறும் கூட பணி செய்ய வற்புறுத்துகிறார். ஆனால், ஆசிரியர்கள் பதிவேடுகளில் கையெழுத்து போட அனுமதிப்பதில்லை. இதனால், தேவையற்ற பிரச்னை எழுகிறது. பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள், அவருக்கு தகுந்த மரியாதையுடன் பேச வேண்டும் தக்க அறிவுரையுடன் பாடம் எடுக்க வேண்டும் நாங்கள் கோரிக்கை விடுகிறோம். இல்லையென்றால், அவர்கள் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும், இதனால் சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்குதான் வீண் அவப்பெயர் ஏற்படும் என்பதை தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்.