செவிப்புலன் கருவியை சாி செய்ய, மாணவிக்கு ஒரு லட்சம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சதிஷ்குமார்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரது மகள் மார்ஷியா ஜோன், ஆலம்பாடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மார்ஷியா ஜோன் இரண்டு வயதாக இருக்கும்போது, காது கேளாமை, வாய் பேசாமை இருப்பது கண்டறியப்பட்டது.
மார்ஷியா ஜோன் செவிப்புலன் கருவி உதவியுடன், பிறர் பேசுவதை புரிந்துகொண்டிருந்தார். கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா காலத்தில், மாணவியின் செவிப்புலன் கருவி (வெளிப்புறச் சாதனம்) பழுதடைந்தது. இதனால், மாணவி பாதிக்கப்பட்டாள். மேலும், கருவியை சரி செய்ய ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்பதால், அவர் பலரது உதவியை நாடினர்.
அரசு பள்ளி ஆசிரியர் சதிஷ்குமார்
இந்த நிலையில், இறுதியாக பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான சதிஷ்குமார் மூலம் தற்போது அந்த மாணவிக்கு உதவி கிடைத்துள்ளது. குறிப்பாக, ரூ ஒரு லட்சத்திற்கும் சற்று அதிகமான நிதியை ஏற்பாடு செய்து, கருவியை சரி செய்ய உதவியுள்ளார்.
ஆசிரியர் சதிஷ்குமார் கூறியதாவது, மார்ஷியா ஜோன் படம் வரைவதில் தனி திறன் கொண்டவர், அவர் எதிர்காலத்தில் சாதனை படைப்பார் என்பதில் ஐயமில்லை. அவரின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வப்போது, செவிப்புலன் கருவியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனையால் மாணவி பேசுவதிலும், காது கேட்பதிலும் அடைந்த முன்னேற்றத்தை இழந்துவிட்டால் என்றே கூற வேண்டும். இது மிகவும் எனக்கு வருதத்தை ஏற்படுத்தியது.
ஏழ்மை நிலையால் அவரது குடும்பத்தாரால் கருவியை சரி செய்ய முடியாததால், கிட்டதட்ட இரண்டு வருடங்களாக, காது கேட்கும் கருவியை அணிய முடியாமல் தவித்துள்ளார். தற்போது கருவியின் பழுதை நீக்க, தேவைப்படும் முழுத்தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. விரைவில் மாணவி மார்ஷியா இயல்பு நிலைக்கு திரும்புவது உள்ளபடியே மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண பின்னணியில் இருந்து வந்த மாணவியன் தாய் திவ்யா பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவர் இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு காலில் குறைபாடால் பாதிக்கப்பட்டவர். ஒரு மாற்றுத்திறனாளி நபராக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்ததால் தன் பிள்ளையும் அப்படியே ஆகிவிடக்கூடாது என்று போராடி வருகிறார். அவருடைய கணவர், அப்பகுதியில் இரு சக்கர வாகன கடையில் வேலை செய்கிறார். வாழ்க்கையை நடத்துவது கடினம். இவ்வாறு ஆசிரியர் கூறினார்.
கடன் வாங்கித்தான் இத்தனை வருடங்களையும் சமாளித்து வந்தோம், சில சமயங்களில் கடன் வாங்கிக்கூட பணம் இல்லாமல் போய்விட்டது என்றார். எனது மகளுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவளால் காது கேளாததாகவும், பேச இயலமால் போனதாகவும். தாய் திவ்யா கூறினார்.
காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் செலவானது. உதவி கோரி அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்து, 2017ம் ஆண்டு எம்ஜிஎம்ஜிஹெச்-ல் அறுவை சிகிச்சை செய்த கொண்டார் மார்ஷியா ஜோன். இதனால், அவரது வழக்கமான பள்ளிப்படிப்பு தாமதமானது, என்று தாய் திவ்யா கூறினார்.
மேலும் அவர், குழந்தைக்கு பேச்சு மற்றும் செவித்திறன் பாதிப்பு குறைந்த சூழ்நிலையிலும், கருவியில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான சூழல் இல்லாமல் இருப்பதால், வருங்காலங்களில் கருவியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அரசே சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.