You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 - கல்வி Full Details of The Tamil Nadu State Policy for Children 2021 - Education

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 | Full Details of The Tamil Nadu State Policy for Children 2021 - Education |

ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றல், அறிவு மற்றும் கல்விக்கான சம உரிமை உள்ளது என்பதை தமிழக அரசு அங்கீகரிக்கிறது. சர்வதேசத் தரத்திற்கு இணையாக குழந்தையின் கல்வித் தேவைக்கும் நல்வாழ்வுக்கும் உகந்த அமைப்பைக் குழந்தைக்கு கிடைக்கச் செய்வதில், தனது பொறுப்பை அரசு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF), இலக்காகக் கொண்டுள்ள ஆற்றல்/திறன் கட்டமைப்பைப் பயன்படுத்தி, அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் (FLN), வயதுக்கும், படிக்கும் வகுப்புக்கும் பொருத்தமான கற்றல் விளைவுகளைத் தரம் உயர்த்துவது குறித்து தனது உறுதியான அர்ப்பணிப்பை தமிழ்நாடு அரசு, இந்தக் கொள்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி சென்றடைவதை உறுதிசெய்ய உதவும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/தளங்களைப் பயன்படுத்துவதற்கு தெளிவாக உறுதி பூண்டுள்ளது.

கீழே குறிப்பிட்டுள்ளவற்றை உறுதி செய்ய, மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

1.   குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களை பலமாக வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் தருவது; அவர்களின் வாழ்க்கை, உடல் மற்றும் நடத்தையை தாங்களே நிர்வகிக்கும் அளவுக்கு அவர்களை முழுமையாக ஆற்றல்படுத்துவதற்கான வசதி செய்தல்.

2.   குழந்தையின் உடல், மனம் மற்றும் உணர்வைப் பாதுகாக்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பாதுகாப்பான, பத்திரமான கற்றல் அமைப்பைத் தருதல்.

3.   5 வயது முடிந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களுக்கு அருகாமையில் பள்ளியை அமைத்து, குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்தல்.

4.   குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, பாலினம் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற கல்வி கற்பதற்கான பல்வேறு தடைகளை சரி செய்து அனைத்து நிலைகளிலும் பள்ளி இடைநிற்றலைக் குறைத்தலின் மூலம் பாதுகாப்பான முறையில் பள்ளிகளில் இலவச, சமமான, அனைத்து வகையான குழந்தைகளையும் உள்ளடக்கிய மற்றும் தரமான கல்வி கிடைப்பதை அதிகரித்தல்.

5.   மிகச் சிறப்பான இடைநிலைக் கல்வியை குறைந்த செலவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்தல், அதன் மூலம் அவர்கள் உயர்கல்வியை அடைவதற்கான உரிமை உடையவர்களாக்குதல்.

6.   பாலின சமத்துவம், அறம் சார்ந்த மதிப்பீடுகள் குறித்த கல்வி, வாழ்க்கைத் திறன் மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது, இதற்காக வயதுக்கு ஏற்ற, அனைவரும் பங்கேற்கும் விதத்திலான குழந்தைகளுக்குப் பிடித்த கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகளை உருவாக்குதல்.

7.   அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் அமைப்புகளை வளர்த்தெடுத்து அவற்றின் வளர்ச்சி மற்றும் அடிப்படையை நிலைநாட்டுதல்.

8.   அனைவருக்குமான பள்ளிகள், அதில் போதிய அளவு பொருத்தமான உள் கட்டமைப்பு வசதிகள், சிறப்புக் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான தகுதியான பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சிறப்புக் கல்வியாளர்கள், மாற்றுத் திறனாளி மற்றும் சிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை உறுதி செய்தல்.

9.   குறிப்பாக வசதியற்ற சமூகப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் உதவுதல்.

10.   குழந்தைகளின் பிறப்பிடம், பாலினம், மதம், சாதி, உடல்நலம், உடல் அல்லது மன ரீதியான குறைபாடு அல்லது சமூக, பொருளாதார அல்லது வேறு எந்த நிலையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு, நடத்தும் முறை மற்றும் பங்கேற்பை வளர்த்து, பள்ளிகளில் அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுதல்.

11.   பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்குள் மாண்புடன் கூடிய கண்ணியம் மற்றும் நேர்மறை ஒழுக்கமுடைய கலாச்சாரத்தைக் கட்டமைத்தல்; வகுப்பிற்குள் அல்லது வெளியில் எந்தவொரு வடிவத்திலும் உடல் ரீதியான தண்டனை அல்லது மனரீதியான துன்புறுத்தலை கண்டிப்புடன் தடைசெய்தல்.

12.   அனைத்துக் குழந்தைகளுக்குமான குறிப்பாக தொற்றுநோய் மற்றும் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த, எளிதில் கிடைக்கத்தக்க கல்வியை வழங்குவதற்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவற்கு முன்னுரிமை அளித்தல்.

13.   அனைத்துக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் வயதுக்கு ஏற்ற கணிணி வழிக் (டிஜிட்டல்) கல்வி வழங்குதல்.

14.   அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நூலகங்கள், சுத்தமான பயன்படுத்தத்தக்க கழிவறைகள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்புத் தேவைகளை உருவாக்குவதன் மூலம் பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்களின் தரத்தை உறுதி செய்தல்.

15.   பள்ளிகளில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆலோசனை, தொழிற்பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகள் மூலம் தொழிலை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குதல்; மற்றும் பள்ளி இடைநின்றவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துதல்.

16.   குழந்தைகளின் வயதுக்கேற்றபடி உள்ளார்ந்த திறனை வளர்ப்பதற்காக சுற்றுவட்டாரம், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில் கலாச்சார மற்றும் அறிவியல் பூர்வ செயல்பாடுகள், பாதுகாப்பான விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு, பொழுது போக்கு, ஓய்வு, பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுக்கள் ஆகியவற்றிற்கான முன்முயற்சிகளை மேம்படுத்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல்.

17.   உள்ளூரில் எளிதில் அணுகும் விதத்தில் பொது நூலகங்களை மேம்படுத்தி குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

18.   மது, புகையிலை மற்றும் அனைத்து போதைப் பொருள் போன்ற தீங்குகள் நெருங்காத வண்ணம் பள்ளி குழந்தைகளைப் பாதுகாத்தல்.

19.   கல்விச் சேவைகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியை நிரப்புதல் மற்றும் அது தொடர்பான வரைவுத் திட்டத்தை உருவாக்க உள்ளாட்சிகளுடனும் சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுத்துதல்.

20.   இடைநிற்றல் மற்றும் அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய பள்ளிகளில் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.

21.   அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, இலவச, ஒருங்கிணைந்த, சமத்துவமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல்.

22.   அனைத்து குழந்தைகளையும் பொறுப்புள்ள குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகளை அறிமுகப்படுத்துதல்.

23.   உள்ளாட்சி அமைப்புகளுடன் பல்துறையினரின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்து பணிகளைச் செய்து சமூகம் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்துதல்.

24.   புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளை பகுதிவாரியாக இனம் கண்டு அவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வாய்ப்பு வழங்குதல். அவர்கள் தடையின்றி தங்கள் கல்வியைத் தொடர வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தல்.