ராணிப்பேட்டை பாணாவரத்தில் உள்ள
கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பாடபுத்தகங்கள் கிழிக்கப்பட்டு சிதறி கிடைந்தது. நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தது. மதுபாட்டில்கள் ஆங்காங்கே கிடந்ததால், மக்கள் அதனை கண்டு முகம் சுழித்தனர்.
பள்ளி மூடியிருந்ததை சாதகமாக்கி கொண்டு சமூக விரோதிகள் சிலர் பள்ளி வகுப்பறையை மதுக்கடை பாராக மாற்றி அட்டகாசம் செய்துள்ளனர். சில நாட்கள் முன்புதான் இந்த பள்ளியில் சிலிண்டர் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக விரோதிகளால் பள்ளி மாண்பு சீர்குலைகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், ஆங்கில வழி பிரிவில் சேர மாணவர்களிடம் தலா ரு 500 முதல் ரூ 1000 வரை கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதேபோன்று, பள்ளி தலைமை ஆசிரியர் தனது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் கடனாக பெற்ற நிலையில் 20 மாதங்களில் ஒரு தவணை கூட செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுதவிர, பள்ளியில் ரூ.6000 மதிப்பிலான பொருட்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் நேற்று தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பள்ளிக்கு உபகரணங்கள் வாங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்ததாகவும், பின்னர் அந்த மாணவர்களிடமே திரும்பி ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிப்பதாக கூறியுள்ளனர்.
முறைகேடுகளை தவிர்க்க குரூப் 1 தேர்வு விடைதாள்கள் கொண்டு செல்லப்படும் பெட்டிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் நேற்று ஊட்டியில் தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர்களில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து வருகிறது என அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்வில் அரசு தலைமை கொறாடா ராஜேந்திரன் பேசினார்.
ஓய்வூதியதாரரின் கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது என்று தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியதாரர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 2ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
வத்தலகுண்டு வட்டார கல்வி அலுவலகத்தில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். போலீசார் விசாரணை.
வாலாஜபாத் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 1 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிடாமல் 12.30 பள்ளி வளாகத்தில் கூடினர். ஆனால், அமைச்சர் பென்ஜமின் 2 மணி நேரமாக அங்கு வராததால், மாணவர்கள் பட்டினியுடன் காத்துகிடந்தனர். பின்னர், அமைச்சர் வந்தவுடன் சைக்கிள்கள் அவசர அவசரமாக வழங்கப்பட்டது.
அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.
பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான ஆவணங்களை சரி பார்த்த பிறகு இந்தப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும்.
பாட புத்தக கட்டணம் மற்ற சிறப்பு கட்டணங்களை வசூல் செய்யும் போது அதற்கான ரசீதுகளை பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அளிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.