ஆசிரியர் சங்கங்கள் மாணவர்களின் கல்வி நலனை மையப்படுத்தி பள்ளி திறந்த பின் இந்தக் கல்வி ஆண்டின் குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை (syllabus) குறைத்து எப்படி மாற்றி அமைப்பது, மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியினை எப்படி திட்டமிட்டு நடத்த வேண்டும் என்பதற்காக கல்வித்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் 12.05.2020 அன்று 12 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக்குழுவில் அரசு பள்ளி ஆசிரியர்களோ, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளோ, உளவியல் ஆலோசகர்களோ, மாணவ அமைப்பினரோ இல்லாத ஒரு குழு உருவாக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது, அவர்கள் ஆசிரியர்களை குழுவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 17 முதல் இன்றைய தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது கொரோனா வீரியம் பொறுத்தே செய்யப்படும். நீண்ட நாள் விடுமுறையால் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்தக் குழுவில் துறை இயக்குனர்கள், ஐஐடி பேராசிரியர் ஒருவர், யூனிசெஃப் சார்பாக ஒருவரும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு 15 நாட்களுக்குள் கூட்டத்தினை கூட்டி முடிவு அறிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த குழு நேர்முகக் கூட்டத்தினை மிகக் குறைவாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கூட்டம் நடத்தியதாக தெரிகிறது. யூனிசெஃப் சார்பாகவும் ஐஐடி பேராசிரியரும் இணைய வழியாக நிறைய கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
துறை இயக்குனர்கள் ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அந்த கருத்துக்களை நாங்கள் கூட்டத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். துறை இயக்குநர்கள் வலியுறுத்திப் பேசிய கருத்துக்கள் எல்லாம் கூட்டத்தின் முடிவாக அமையாது என்றே நாம் எண்ணுகிறோம். ஏனென்றால் பள்ளிக்கல்வித்துறையின் கருத்தினை நாளேடுகளுக்கு இயக்குனர்கள் செய்தியாக அனுப்பி வைத்தாலும் அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர்கள் கருத்து அரசின் கருத்தல்ல என்று அதிரடியாக பேட்டியில் தெரிவித்து விடுகிறார்.
அன்றாடம் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்வியலுடன் இரண்டற கலந்தவர்கள் தொடக்கநிலை முதல் உயர்நிலை மேல்நிலை வரை உள்ள ஆசிரியர்கள் ஆவார்கள். கல்வித்துறை வல்லுநர் குழு என்றாலே கல்வியாளர்கள் இடம்பெற்று இருப்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் இந்தக் குழுவில் இடம் பெறாது போனதன் உள் நோக்கம் தான் என்ன? இவர்களின்றி அரசுப் பள்ளி மாணவர்கள் நலனை மையப்படுத்தி எந்த ஒரு கருத்தொருமித்த முடிவும் இந்தக் குழுவில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.
இணைய வழிக் கற்றலின் மூலம் கிராமப்புற மாணவர்கள் எந்த அளவிற்கு இழந்த விடுமுறை நாட்களில் இழந்துள்ள பாடங்களை கிரகிக்க முடியும் என்பதை நம்மால் எதார்த்த சூழ்நிலையுடன் தெரிவிக்க முடியவில்லை. குக்கிராமங்களில் வாழ்ந்து வரும் மாணவர்களுக்கு இது போன்ற வசதிகள் பள்ளியிலும் இல்லை வீட்டிலும் இல்லை. கல்வி தொலைக்காட்சி மூலமாக நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளார்கள். பாடத்திட்டத்தில் எதை குறைப்பது எத்தனை நாட்கள் நடத்துவது என்பதெல்லாம் திட்டமிடுவதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளையும், கல்வியாளர்களின் கருத்துப் பதிவும் மிகவும் அவசியமானதாகும்.
முதலில் பள்ளிகள் திறக்கப்படட்டும். பள்ளிகள் திறக்கப்பட்டதற்குப் பிறகு இந்த கூட்டத்தில் எடுக்கப்படுகிற முடிவுகளை மாணவர்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துவோம். கற்றல் கற்பித்தல் பணிகளை வகுப்பறையில் நடத்தப்போவது ஆசிரியர்களே ஆவார்கள். மேலெழுந்தவாரியாக இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படுகிற கருத்துக்கள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பதையெல்லாம் எதார்த்த உணர்வுடன் சரிபார்க்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்ட அறிக்கை: இந்தக் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் பணிகள் சார்ந்தும், தேர்வுகள் சார்ந்தும், பாடத்திட்டங்கள்,ஒவ்வொரு வகுப்புக்குமான பாட அளவுகளை முடிவு செய்ய ,அரசு அமைத்த குழுவில் உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் தனியார் பள்ளி அமைப்பு அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள். அக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர் உறுப்பினர்கள். பெற்றோர்கள் போன்றோரும் இடம் பெறவேண்டும். இவ்வாறு கழகம் வலியுறுத்தியுள்ளது.