விமர்சனங்களை ஏற்கக் கூடியவர் வசந்திதேவி - ஆசிரியர்களுக்கு பதிலடி
இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம் என்ற கட்டுரையை கல்வியாளர் வசந்திதேவி தனியார் நாளிதழில் எழுதியிருந்தார். இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நீண்ட நெடிய பதிலை வழங்கினார். இது ஆசிரியர் சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆசிரியர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வாட்ஸப்பில் வசந்திதேவி அவர்கள் செயல்பாடு குறித்து ஒரு சிறிய தகவல் வாட்ஸ்ப்பில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த பதிவு அப்படியே... ஆனால், நேற்று சில முகநூல் பதிவுகள் வசந்திதேவியை ‘ மேட்டிமைச் சிந்தனையாளர்’ என விமர்சித்தபோது இது தடுமாற்றம் என உணர்ந்தேன்.
இவரா மேட்டிமைச் சிந்தனையாளர்?ஒழுங்கீனம் என்ற பெயரில் டி சி கொடுக்கப்பட்ட மாணவிகளுக்காக, கல்லூரி முதல்வரிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டபோது, இருபது வயது கல்லூரி ஆசிரியை அவர். அநீதிக்கெதிரான போராட்டம் அன்று தொடங்கியது. காலமெல்லாம் போராட்டப் பாதையில் நடந்தவர் அவர். 1980களில் முதன் முதலாக நான் அவரைச் சந்தித்ததும் ஒரு தர்ணா போராட்டத்தில்தான். இடம்- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். திண்டுக்கல்லிலும் கும்பகோணத்திலும் மாணவிகளைத் திரட்டி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றவர் வசந்திதேவி.
மாணவிகள் வரதட்சணைக்கு எதிராக முழக்கமிட்டது மறக்கமுடியாத வரலாறு. ஆசிரியர் போராட்டம் ஒவ்வொன்றிலும் முன்வரிசையில் நின்றவர் வசந்திதேவி. ஜேக்டீ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். மதுரை சிறையில் தோழிகளோடு இருந்தார். நெல்லைப் பல்கலையில் துணைவேந்தராக 1992இல் பணியேற்றதும் , பாபர் மசூதிஇடிப்புக்கு எதிராக ஆசிரியர்களையும் மாணவர்களையும் திரட்டி இந்துத்துவ வெறிக்கு எதிராக முழக்கமிட்டபடி வீதிகளில் போன இந்தியாவின் ஒரே ஒரு துணைவேந்தர் அவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுமல்களையும் மிரட்டல்களையும் தைரியமாக எதிர்கொண்டவர்.
பல்கலைக்கழகத்துக்குக் கட்டடங்கள் வேண்டுமென்று, துணைவேந்தர் என்ற கிரீடத்தை உதறி ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தவர் அவர்.
சமூகப் போராளி மேதா பட்கரை உரையாற்ற பல்கலைக் கழகம் அழைத்து வந்து கவர்னர் வெளிப்படுத்திய கசப்பைச் சிரித்த முகத்தோடு சந்தித்தவர். பாடத்திட்டங்களில் புரட்சிகர மாற்றம் நிகழ்த்தியவர் வசந்திதேவி. அவர் துணைவேந்தராக இருந்த 6 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள் பல்கலைக்குள் நுழையப் பயந்தனர். பல்கலைப் பணி முடிந்ததும்,மனித உரிமைக் கல்விப் பொறுப்பேற்று, உரிமை விதைகளை இந்தியா முழுக்கத் தூவினார் வசந்திதேவி.
அரசுப் பள்ளிகளின் நலன்களுக்காகவே, கல்வியாளர் ௭ஸ்.எஸ்.ஆர், தோழர் ஜே.கே ஆகியோருடன் இணைந்து பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினார் வசந்திதேவி. இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவுக்காக 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் குரல் கொடுத்தவர் அவர்.
ஆசிரியர்களைப் பற்றி அவர் வைக்கும் விமர்சனம் புதியதா என்ன?ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளோடும் புதிய கனவுகளோடும் உழைப்பவர்கள், சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்றி தனிமைப்பட்டு பகிர்ந்துகொண்ட வருத்தத்தின் தொடர்ச்சிதான் அது. அந்தத் தனிமை உடைந்து அரசுப் பள்ளிகள் மலர வேண்டும் என்பதுதான் வசந்திதேவியின் கனவு . 83 வயதிலும் அவர் சலிக்காமல் பேசுவதும் எழுதுவதும் அதற்குத்தான்.