கார் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பரால் விபத்து நேரத்தில் காரில் பயணிக்கும் உயிர்கள் காப்பாற்ற முடியாத சூழல் உருவாவதை கருத்தில் கொண்டு, காலம் காலமாக கார் தயாரிக்கும் நிறுவனங்களே ராட்சத பாம்பர்களை காரில் பொருத்தவதில்லை.
பம்பர் பொருத்துவதால், கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படும் விபத்தின்போது, காற்று பலூன்கள் சரியான நேரத்தில் விரிவடைவதில்லை எனவும், அந்த குறிப்பிட்ட வினாடியில், உயிர்கள் விபத்துக்கு இரையாகிவிடுகின்றது என்பதுதான் நிதர்சனம். ஆனால், நம்மூர் மேதாவிகள் கெத்து என நினைத்து பம்பர்களை பொருத்தி ரோட்டில் பந்தா கட்டுவது ஒரு வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ரோட்டில் நடந்து செல்லும் அப்பாவிகள் மீது காரை தாறுமாறாக ஓட்டி, அதே பம்பரை அவர்கள் மேல் மோதவிட்டு, சாகச கொலைகளை செய்கின்றனா். இதனை கருத்தில் கொண்டு, போக்குவரத்துறை பம்பர் அகற்ற வேண்டும் என ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களிடம் கெடுபிடி செய்து வந்தது. அதே நேரத்தில், மக்களுக்கு முன்னுதரனமாக இருக்க வேண்டிய அதிகாரிகள், அமைச்சர்கள் காரில் உள்ள பம்பர்கள் அகற்றப்படவில்லை எனவும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை வலியுறுத்தி பல எதிர்ப்பு குரல்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எதிரொலிக்க தொடங்கின. ஆனால், அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் காரில் பம்பர்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான். அதேபோல் சம்பவம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரி தனது காரில் உள்ள பம்பரை கழற்றாமல், சட்டத்தை மதிக்காமல் காரில் ஹாயாக வலம் வந்துள்ளார். மாவட்ட உயர்ந்த அதிகாரிகள் என கூறலாம். இதை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், அந்த கல்வி அதிகாரி மீது திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலருக்கு தகுந்த ஆதாரத்துடன் பம்பர் கழற்றாமல் காரில் வலம் வந்துகொண்டிருக்கிறார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு தபாலில் புகார் அளித்தார். வேறுவழியின்றி, போக்குவரத்து அதிகாரிகள் காரில் இருந்த பம்பரை அலேககாக கழற்றிவிட்டனர். இதில் சம்மந்தப்பட்ட அதிகாரி சட்டத்தை பின்பற்றவில்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் "அப்பாடா எங்கள் வேலை முடிஞ்சுருச்சு என நடையை கட்ட, சமூக ஆர்வலர் விடுவாரா, அதெல்லாம் முடியாது, சாமானியனுக்கு ஒரு நீதி, மக்கள் வரி பணத்தில் சம்பளம் பெறும் கல்வி அதிகாரிக்கு ஒரு நீதியா" எனக்கூறி, அந்த அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் இல்லையென்றால், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக கருத வேண்டியிருக்கும் என மீண்டும் ஒரு புகார் கடிதம் அனுப்பி, போக்குவரத்து துறைக்கு ஓரு மின்னல் ஷாக் கொடுத்தார். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை கருத்தில் கொண்டு, சென்னையில் இருக்கும் உயர் கல்வி அதிகாரிகள் அனைத்து மாவட்ட முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பம்பர் அகற்றுவது குறித்து உரிய அறிவுரைகளை உத்தரவு நகல் மூலம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.