கல்வி மேம்பாட்டுக்குழு ஆய்வு 2021 - 57.4 சதவீதம் பேர் கல்லூரிக்கு வர பயம் Education Development Committee Survey 2021
கல்வி மேம்பாட்டுக்குழு ஆய்வு 2021
கொரோனா தொற்று காரணமாக 57.4 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு வர பயப்படுவதாக கல்வி மேம்பாட்டுக்குழு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரானா பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் செப்டம்பர் -1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. கல்லூரிகள் திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் கல்லூரி மாணவ மாணவிகளின் வருகைப்பதிவு என்பது பல கல்லூரிகளில் 30 முதல் 50 சதவீதம் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட சரி பாதிக்கு மேலான மாணவர்கள் கல்லூரிகளுக்கு திரும்பவில்லை என்றும், கல்லூரி மாணவ மாணவிகளின் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து காரணம் அறியும் களஆய்வு கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வு இணைய வழியில் கலை, அறிவியல் ,வணிகவியல் ,பொறியியல், டிப்ளமோ என பல தரப்பு கல்லூரி மாணவ மாணவிகளிடமும் மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வில் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகள்
1 கொரானா தொற்று பயம் காரணமாக கல்லூரிகளுக்கு வரவில்லையா?
2 குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேர வேலைக்கு சென்றுவிட்டீர்களா?
3 கல்லூரி கட்டணங்கள் செலுத்த நிர்பந்திப்பார்கள் என்ற பயமா?
4 பகுதி நேரப்பணியாளர்களாக துவங்கி முழு நேரப்பணியாளர்களாக மாறிவிட்டீர்களா?
5 கல்வியின் மீதான விருப்பம் குறைந்துள்ளதா?
ஆகிய மேற்காணும் கேள்விகளை பலதரப்பு கல்லூரி மாணவ மாணவிகளிடமும் கள ஆய்விற்காக முன்வைக்கப்பட்டன
இந்த கள ஆய்வில் பல்வேறு வகையான கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 549 பேர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
கள ஆய்வு முடிவுகள் என்ன?
கொரானா தொற்று பயம் காரணமாகவே கல்லூரிகளுக்கு வரவில்லை என 57.4% பேரும்
குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேர வேலைக்கு சென்று விட்டதாக 41.7 % பேரும்
கல்லூரி கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கல்லூரிக்கு செல்ல தயக்கம் உள்ளதாக 41.7 % பேரும்
முழு நேர வேலைக்கு சென்று விட்டதாக 25.5% பேரும்
கல்வியின் மீதான விருப்பம் குறைந்துள்ளதாக 19.1% பேரும்
என தங்கள் கருத்துகளை கள ஆய்வின் மூலம் தெரிவித்து உள்ளனர்.
கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.லெனின்பாரதி கூறும்போது,
இவ்வாய்வு முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது முழு நேரமாக பணிக்கு 25 .5 % மாணவ மாணவியர் சென்று விட்டதாக அறிவது அதிர்ச்சி தருகிறது.
மேலும் கல்வியின் மீதான கவனம் மற்றும் விருப்பம் குறைந்துள்ளதாக 19.1% மாணவ மாணவியர் கூறியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் என கல்வி மேம்பாட்டுக்குழு கருதுகிறது. இவற்றை தற்போது கவனத்தில் எடுத்து தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையும், கல்வித்துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும் மாற்று வழியை யோசிக்காமல் விட்டு விட்டால் கல்லூரிகளில் இடைநிற்றல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும் அபாயம் உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.