Education at Doorstep in Tamil | வீட்டுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் மீது புகார்
Education at Doorstep in Tamil
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எழுதுதல், வாசித்தல் உள்ளிட்ட கற்றல்கள் முழுமையாக மறந்துவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் கிராமங்கள் மற்றும் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று, சமூக இடைவெளி பின்பற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்தி குறைந்தபட்ச கல்வியை உறுதி செய்து வருகின்றனர். ஏனென்றால், பல இடங்களில் கல்வி தொலைக்காட்சி தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இவரது செயல்பாட்டிற்கு பலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், திடீரென, வீட்டுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆன்லைனில் ஒருவர் புகார் அளித்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அந்த புகைப்பட பதிவில், புகார் அளித்தவர் மற்றும் முகவரி வண்ணத்தால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புகாரில், செயல்முறை மேற்கோள் காட்டி, “தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் கண்டு பயில பள்ளி கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் பார்ப்பது மற்றும் ஆசிரியர்கள் அதை கண்காணிப்பது மற்றும் தேவையான மாணவர்களுக்கு ஒப்படைப்பு கொடுப்பது மற்றும் அவற்றை பார்வையிடுவது சார்பாக செயல்முறைகள் வெளியிட்டு உள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.
ஆனால், கோவிட் – 19 நடைமுறைகளை பின்பற்றாமல், பல பள்ளி ஆசிரியர்கள் கொரோன தொற்று பரப்பும் வகையில் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்துகின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், புகாரில், அவர்கள் பல வீடுகளுக்கு செல்வதால் நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து நோய் தொற்று இல்லாத மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் கல்வி வளர்ச்சி நாள்களில் பல ஆசிரியர்கள் மாணவர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து கொண்டாடி உள்ளனர், என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் செயல்முறைகளுக்கு எதிராக செயல்படுகின்றனர் எனவும், மேலும் கல்வி அதிகாரிகள் இதனை கண்டிக்காமல் ஊக்குவிப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் செயல்படாதபடி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
