ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை காலத்தில், எக்காரணத்தை முன்னிலைப்படுத்தியும் பள்ளிக்கு வரும்படி, ஆசிாியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் கூறியதாவது, பள்ளி கல்வி இயக்குனரின் அறிவுறுத்தல் படி ஏப்ரல் 30ம் தேதி ஆசிரியர்களுக்கான கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் ஜூன் 1 வரை விடுமுறை நாட்களாகும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வு பணிகளிலும், பின்னர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பணிகளிலும், மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியிலும், நான் முதல்வன் திட்டத்தின் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டு பயிற்சிகளிலும் பங்கேற்கின்றனர்.இத்தகைய நிலையில் கோவை மாவட்டத்தில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த 2 மாதங்களாக பணிகளிலும், மதிப்பெண் மதிப்பீடு பணிகளிலும் உழைத்துள்ள ஆசிரியர்களுக்கு, இப்போது விடுமுறை மிகவும் அவசியம். எனவே விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வருவதற்கான முடிவை, கட்டாயப்படுத்தாமல், ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஒப்படைக்க வேண்டும், என்றார்.